புத்தளம் பொதுச் சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில் முதல் கட்டமாக 1200 பாடசாலை மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்குக் கண்ணாடி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புத்தளம் பொதுச் சுகாதார திணைக்களத்திற்குட்பட்ட புத்தளம் பிரதேச செயலகம் மற்றும் வண்ணாத்தவில்லு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சுமார் 44 பாடசலைகளில் கல்வி கற்கும் மாணவர்களில் முதல் கட்டமாக 1200 மாணவர்களுக்கு இலவச மூக்குக்கண்ணாடி வழங்கப்பட உள்ளது.
இதில் முதல் கட்டமாக புத்தளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 30 பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களில், பார்வை குறைபாடுடைய மாணவர்கள் புத்தளம் பொதுச் சுகாதார திணைக்களத்தின் அதிகாரிகளினால் இனம்காணப்பட்டு, அவர்களுக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 16.05.2023 செவ்வாய்க்கிழமை காலை 08.00 மணி முதல் புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெற உள்ளது.
இரண்டாம் கட்டமாக வண்ணாத்தவில்லு பிரதேச செயலகத்திற்குட்பட்ட 14 பாடசாலைகளில் கல்வி கற்கும் பார்வை குறைபாடுடைய மாணவர்கள் புத்தளம் பொதுச் சுகாதார திணைக்களத்தின் அதிகாரிகளினால் இனம்காணப்பட உள்ளத்துடன், அவர்களுக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு எதிர்வரும் வாரங்களில் இடம்பெறும் என புத்தளம் பொதுச் சுகாதார திணைக்களத்தின் தலைமை அதிகாரி திரு. சுரேஷ் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
இதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்துள்ள நிலையில் பார்வை குறைபாடுடைய மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளுக்கு இது குறித்த தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.