அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை பதவியேற்கவுள்ளார்.
அமெரிக்காவின் 47-ஆவது அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பதவியேற்பு விழாவின் முதல் நிகழ்ச்சி இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சரவை வேட்பாளர்கள் உள்பட 500 நட்சத்திர உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானியும், அவரது மனைவி நீடா அம்பானியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும், இன்றிரவு நடக்கவிருக்கும் இரவு விருந்திலும் டிரம்ப் கலந்து கொள்ளவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இசை நிகழ்ச்சிகளுடன் நாளை நடைபெறவுள்ள டிரம்ப்பின் அதிபர் பதவியேற்பு விழாவில் இந்தியாவின் சார்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், முன்னாள் அதிபர்களான ஜோ பைடன், பில் கிளின்டன், ஜார்ஜ் டபுள்யூ புஷ், பராக் ஒபாமா உள்பட ஹிலாரி கிளிண்டன், கமலா ஹாரிஸும் பங்கேற்கவுள்ளனர்.
மேலும், அமெரிக்காவில் டிக் டாக் செயலி ஞாயிற்றுக்கிழமை முதல் தடை செய்யப்பட்ட நிலையில், நாளை நடைபெறவுள்ள அதிபர் பதவியேற்பு விழாவில் டிக் டாக் தலைமை நிர்வாக அதிகாரி ஷோ செவ் கலந்துகொள்ள உள்ளார். டிரம்ப் அதிபராகப் பதவியேற்ற பின்னர், டிக் டாக் சேவைகளை அமெரிக்காவில் தடையின்றி பயன்படுத்த நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படுமென டிரம்ப் குறிப்பிட்டுள்ளதாக டிக் டாக் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவர்கள்தவிர, ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன், அர்ஜெண்டினா அதிபர் ஜேவியர் மிலேய், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இவர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்பதில் உறுதியில்லை.
அதிபர் பதவியேற்பு விழா, இந்திய நேரப்படி இரவு 10.30 மணியளவில் நடைபெறும். அமெரிக்க அரசியலமைப்பின்படி, ஒவ்வொரு அதிபரின் பதவிக்காலமும் ஜனவரி 20 ஆம் தேதியில்தான் தொடங்கப்படும். ஒருவேளை ஞாயிற்றுக்கிழமைகளில் ஜனவரி 20 ஆம் தேதி வருவதாயிருந்தால், அதற்கு மறுநாள்முதல் பதவிக்காலம் தொடங்கும்.
அதிபராகப் பதவியேற்பவரின் சத்தியப்பிரமாணம், அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையின்கீழ் மேற்கொள்ளப்படும். இதனைத் தொடர்ந்து, அடுத்த 4 ஆண்டுகளுக்கான தனது திட்டங்கள் குறித்து, அதிபர் தனது முதல் உரை ஆற்றுவார்.
பதவியேற்பு விழாவின் தொடக்கவிழாவையடுத்து, மதிய விருந்துக்கு அழைத்து செல்லப்படுவர். மேலும், அதிபராக பதவியேற்ற நாளில், தனது முதல் பணியாக நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திடுவது பாரம்பரியம்.
டிரம்ப் கையெழுத்திடப்போகும் முதல் உத்தரவுகள் குறித்து தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், முன்னாள் அதிபர் ஜோ பைடன் ரத்து செய்த சில நிர்வாக உத்தரவுகளை மீண்டும் நிலைநிறுத்தும் உத்தரவுகளில் கையெழுத்திட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. கையெழுத்திடும் பணியைத் தொடர்ந்து, 3 கண்காட்சிகள், அதற்கு அடுத்ததாக பல்வேறு நிகழ்ச்சிகளிலும் டிரம்ப் கலந்துகொள்ள உள்ளார்.
டிரம்ப்பின் பதவியேற்பு விழாவுக்கு நன்கொடையாக 200 மில்லியன் டாலர் (ரூ. 1,731.5 கோடி) பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவில் நிலவும் கடும் குளிரால், பதவியேற்பு விழாவை பொதுவெளியில் நடத்த இயலாது என்று கூறிய டிரம்ப், 40 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக மூடப்பட்ட திடலுக்குள் அதிபர் பதவியேற்பு விழா நடக்கவிருப்பதாக தெரிவித்தார்.