தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கர்நாடகா தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் மீனா ராகுல் காந்திக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் முனணி தலைவருமான ராகுல் காந்தி, கர்நாடகாவின் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டதாகவும், 12,000 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
மகாதேவபுரா தொகுதியில் தேர்தல் மோசடி நடந்துள்ளது. “1,00,250 வாக்குகள் திருடப்பட்டன, 12,000 போலி வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இது தேர்தல் ஆணையத்தின் தோல்வியையும், பாஜகவின் மோசடியையும் காட்டுகிறது,” என்று தெரிவித்தார் ராகுல் காந்தி. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதிலும், தேர்தல் முறைகேடுகள் நடந்ததாகவும், இது இந்திய ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் என்றும் அவர் விமர்சித்தார்.
டெல்லியில் கடந்த 07.08.2025 அன்று பத்திரிகையாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, பெங்களூர் சென்ட்ரல் லோக்சபா தொகுதிக்குட்பட்ட மகாதேவபுரா சட்டசபை தொகுதியில் 1 லட்சத்து 250 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளது. பாஜகவுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது. வாக்குகள் திருடப்பட்டு, போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் தான் பாஜக வேட்பாளரிடம் காங்கிரஸ் வேட்பாளர் தோற்றார் என்று பரபரப்பான தகவலை கூறினார்.

மகாதேவபுரா சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் மேற்கொண்ட ஆய்வில் சரியாக 1 லட்சத்து 250 போலி ஓட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதில், 11,965 வாக்காளர்களின் பெயர்கள் இரண்டு முறை பதிவாகி உள்ளன. 40,009 வாக்காளர்களின் முகவரிகள் போலி. 10,452 வாக்காளர்கள் ஒரு குறிப்பிட்ட முகவரியில் மொத்தமாக பதிவு செய்துள்ளனர். அதோடு, 4,132 பொருத்தமில்லாத புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இப்படியாக மகாதேவபுராவில் 1,00250 ஓட்டுகள் திருடப்பட்டதை நாங்கள் கண்டறிந்தோம். இங்கு புதிய வாக்காளர்களுக்கான படிவம் 6 தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. போலி முகவரியில், ஒரே முகவரியில் கூடுதல் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளன” என்று குற்றம்சாட்டி உள்ளார்.
இதையடுத்து, கர்நாடகா தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் மீனா ராகுல் காந்திக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், ராகுல் காந்தி தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களுடன் நாளை (ஆகஸ்ட் 8, 2025) அன்று தன்னை சந்திக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில வாக்காளர் பட்டியலில் முறைகேடாக சேர்க்கப்பட்ட மற்றும் விலக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை கையெழுத்திட்ட உறுதிமொழிப் பத்திரத்துடன் இணைத்து பகிருமாறு கர்நாடக தலைமைத் தேர்தல் அதிகாரி ராகுல் காந்தியை கேட்டுக்கொண்டுள்ளார்.