Wednesday, January 8, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal News2024இல் உலகில் இடம்பெற்ற தேர்தல்களும், முடிவுகளும்!

2024இல் உலகில் இடம்பெற்ற தேர்தல்களும், முடிவுகளும்!

தெருவோரங்களில் ஆரம்பித்து செவ்வாய்க் கிரகம் செல்ல திட்டமிடும் நாடுகளின் அரங்கு வரையில் அரசியல் பேச்சும் விளையாட்டுகளும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அந்த வகையில், மெகா தேர்தல் ஆண்டாக அமைந்த 2024, உலக அரசியலுக்கு பெரும் தீனியிட்டது எனலாம்.

இந்தாண்டில், உலகம் முழுவதும் 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் கோடிக்கணக்கானோர் (உலக மக்கள்தொகையில் 49%) வாக்களித்தனர். முக்கிய தலைவர்கள், எதிர்பாராத அரசியல் திருப்புமுனைகள், அரசியல் குழப்பங்கள், ஆட்சிக் கவிழ்ப்பு, திவால் நிலை என பலவாறான விளையாட்டுகளை இந்தாண்டின் அரசியல் மேடை கண்டுவிட்டது.

2024-ல் உலகளவில் ஈர்ப்பையும் முக்கியத்துவத்தையும் பெற்ற சில நாடுகளின் தேர்தல்களைப் பற்றி…

இந்தியா

இந்தியாவில் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் முதல் ஜூன் வரையில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனதா கூட்டணிக் கட்சிகளுக்கும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையில்தான் குருதியில்லா போர் (அரசியல்) நடைபெற்றது. இந்தியாவில் ஆட்சியமைக்க மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 272 தொகுதிகள் தேவை. கடந்த முறை 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக தனித்து வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

ஆனால், 2024 ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணியுடன் சேர்த்தே பாஜக 292 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 234 இடங்களிலும், பிற கட்சிகள் 17 இடங்களிலும் வெற்றி பெற்றன. இன்னும் 40 தொகுதிகள் இருந்தால் காங்கிரஸ் கூட்டணியும் ஆட்சி அமைக்கலாம்.

இந்த நிலையில்தான், பாஜக ஆட்சியமைப்பதற்கு உதவும் வகையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசக் கட்சியின் ஆதரவும், பிகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் ஆதரவும் கிடைத்தது. இதனையடுத்து, மூன்றாவது முறையாக பிரதமராக பாஜகவின் நரேந்திர மோடி பதவியேற்றார்.

அமெரிக்கா

உலகளவில் பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டிருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்தலின் மூலம் உலகப் பொருளாதாரம், சில நாடுகளுக்கிடையேயான மோதல் முதலானவற்றில் மாற்றம் ஏற்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டதால், அதிகளவிலான தாக்கத்தை அமெரிக்க அதிபர் தேர்தல் பெற்றிருந்தது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சிக்கும் குடியரசுக் கட்சிக்கும் இடையில்தான் இருமுனைப் போட்டி நடந்தது.

தேர்தலில் மொத்தமுள்ள 538 தொகுதிகளில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் 277 (51%) தொகுதிகளிலும், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 224 (47.5%) தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். பெரும்பான்மைக்குத் தேவையான 270 தொகுதிகளைப் பெற்று அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார்.

கூடுதலாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் பல ருசிகர சம்பவங்களும் நடந்தன. தொடக்கத்தில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஜோ பைடனும், குடியரசுக் கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப்பும்தான் தேர்தலில் போட்டியிட இருந்தனர். ஆனால், ஜூன் மாதம் தொலைக்காட்சியொன்றில், பைடனுக்கும் டிரம்ப்புக்கும் இடையிலான நேரடி விவாதத்தில் சரிவர விவாதிக்க முடியாமல் பைடன் தடுமாறியது, அவருடைய கட்சியினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவருடைய உடல்நிலையிலும் சின்னப் பிரச்னை வர, தான் அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்த அதிபர் ஜோ பைடன், வருகிற அதிபர் தேர்தலின் வேட்பாளராகத் துணை அதிபர் கமலா ஹாரிஸை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, கமலா ஹாரிஸை எதிர்த்து டிரம்ப் தேர்தல் பிரசாரம் நடத்தினார்.

இந்தத் தேர்தலில் உலக பணக்காரரான எலான் மஸ்க்கும்கூட முக்கியப் பங்கு வகித்தார். அவர்தான், டொனால்ட் டிரம்ப்பை ஆதரித்து சுமார் ரூ. 630 கோடிக்கும் மேல் நன்கொடை வழங்கினார். இதனையடுத்து, அமெரிக்க அரசின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான துறையின் தலைமைப் பொறுப்பை எலான் மஸ்க்குக்கு டிரம்ப் வழங்கியுள்ளார் (கைம்மாறு என்றும்கூட வைத்துக் கொள்ளலாம்). இதுதவிர, தேர்தல் நேரத்தில் டிரம்ப் மீது மூன்று முறை கொலை முயற்சிகளும் நிகழ்த்தப்பட்டன. கூடுதலாக, தான் பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே இஸ்ரேல் – காஸா பிரச்னை முடிவுறும் என்றும் டிரம்ப் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டன்

நுணலும் தன் வாயால் கெடும் என்பதை ரிஷி சுனக் நிரூபித்து விட்டதாக, சில மாதங்களுக்கு முன்னர் சில விமர்சனங்கள் எழுந்தன. ஏனெனில், பிரிட்டனில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சியின் பதவிக்காலம் அடுத்தாண்டு வரையில் இருந்த நிலையில், இந்தாண்டே தேர்தலை நடத்தலாம் என்று ரிஷி சுனக் அறிவித்தார். ஆனால், தேர்தலில் ரிஷி சுனக் தோல்வியுற்றது, அவருக்கு சொல்லொணா ஏமாற்றத்தை அளித்தது எனலாம். ஜூலை மாதம் நடைபெற்ற தேர்தலில், கன்சர்வேடிவ் கட்சிக்கும் தொழிலாளர் கட்சிக்கும் இடையிலான தேர்தலில், கன்சர்வேட்டிவ் கட்சியால் வெறும் 121 இடங்களில் மட்டுமே பெற முடிந்ததால், ரிஷி சுனக் பிரதமர் பதவியை இழந்தார்.

தொழிலாளர் கட்சி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்றதன் மூலம், 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இதனைத் தொடர்ந்து, பிரிட்டனின் பிரதமராகத் தொழிலாளர் கட்சியின் கெய்ர் ஸ்டார்மர் பதவியேற்றார்.

ரஷியா

ரஷிய அதிபர் தேர்தலில் விளாதிமிர் புதின் வெற்றி பெற்றதற்கு அடக்குமுறையும்கூட ஒரு காரணமாக இருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் 2 ஆண்டுகளாக (இன்று வரையிலும்) போர் நடந்தும் வரும் நிலையிலும், ரஷியாவில் மார்ச் மாதத்தில் அதிபர் தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் அதிபர் விளாதிமிர் புதினை எதிர்த்து போட்டியிடுபவர்கள் வலுவான எதிர்க்கட்சிகளாக இல்லாததால், அதிபர் தேர்தல் முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டதுபோல அமைந்தது. அதன்படி, ரஷிய அதிபர் தேர்தலில் விளாதிமிர் புதின் 88 சதவிகித வாக்குகளுடன் வெற்றியும் பெற்றார்.

ஐந்தாவது முறையாக வெற்றி பெற்ற அதிபர் புதின், ரஷிய வரலாற்றில் கடந்த 200 ஆண்டுகளில் எந்தத் தலைவரும் இல்லாத வகையில், நீண்டகாலம் உச்ச பதவியில் இருந்தவர் என்ற பெருமையையும் பெறுகிறார்.

மெக்சிகோ

மெக்சிகோவின் 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில், இந்தாண்டில்தான் பெண் ஒருவர் அதிபராகியுள்ளார். ரோமன் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட மெக்சிகோவில் ஜூன் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில், மொரேனா கட்சி (இடதுசாரி) வேட்பாளரான 62 வயதான கிளாடியா ஷேன்பாம் வெற்றி பெற்றதும் வரலாற்றில் இடம்பெறக் கூடியதே.

இவர்தான், மெக்சிகோவின் 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் அதிபரான முதல் பெண் மற்றும் முதல் யூதர். 60 சதவிகித வாக்குகளைப் பெற்று அதிபரான கிளாடியா, 2007-ஆம் ஆண்டு ’அமைதிக்கான நோபல் பரிசை’ வென்ற பெருமைக்குரியவர்.

தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவில் 30 ஆண்டுகளாக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த ஒரே கட்சி, இந்த முறை விரும்பத்தகாத வகையில் வெற்றி பெற்றதும் தென்னாப்பிரிக்க வரலாற்றில் குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்காவில் நிறவெறி வீழ்ச்சிக்கு பிறகு, 1994 ஆம் ஆண்டிலிருந்து ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC) கட்சிதான் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தது.

ஆனால், 2007 ஆம் ஆண்டு முதல், அக்கட்சியின் மீதான தாக்கம் குறைந்து வந்தது. ஊழல், மின் பற்றாக்குறை, சமத்துவமின்மை, வறுமை, வேலைவாய்ப்பின்மை (60% இளைஞர்கள் வேலையின்றி திண்டாட்டம்), வன்முறைகளின் உச்சம் (ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒருவர் கொல்லப்படுவதாக புள்ளிவிவரம்) முதலான காரணங்களால்தான், அந்தக் கட்சியின் மீது மக்களுக்கான நம்பிக்கை மெல்ல மெல்லக் குறைந்தது. முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும்பான்மையை இழந்தாலும், 40 முதல் 50 சதவிகிதம்வரை வாக்குகளைப் பெற்று, ஆப்பிரிக்க தேசிய கட்சி வெற்றியைத் தட்டியதால், சிரில் ராமபோசா பிரதமரானார்.

பாகிஸ்தான்

பாகிஸ்தானில் தேர்தல் நடந்து முடிந்த சில மாதங்களிலேயே முன்னாள் பிரதமரைச் சிறையில் அடைத்த சம்பவமும் நடத்தப்பட்டது.

பாகிஸ்தானில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்தலில் முன்னாள் பிரதமர்களின் கட்சிகளான இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ், பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய 3 கட்சிகளுக்கு இடையேதான் மும்முனைப் போட்டி நிலவியது.

பாகிஸ்தானில் 265 மக்களவை தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலில் பெரும்பான்மை பெற 133 தொகுதிகளில் வெற்றிப் பெறும் கட்சி ஆட்சியமைக்க தகுதி பெறும். இருப்பினும், தேர்தலில் இம்ரான் கான் ஆதரவுபெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் 93 இடங்களிலும், நவாஸ் ஷரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 75 இடங்களிலும், பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றிபெற்றிருந்தாலும், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதனையடுத்து, நவாஸ் ஷரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியும், பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து, தீவிர பேச்சுவார்த்தைக்குப்பின் கூட்டணி அரசை அமைக்க ஒப்புக்கொண்டன. இதனைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமரான ஷெபாஸ் ஷரீப் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், பிரதமராக இருந்தபோது, கிடைத்த பரிசுப் பொருள்களை விற்றது குறித்து அரசுக்கு முறையாக தெரியப்படுத்தத் தவறியதாக தொடரப்பட்ட வழக்கில், இம்ரான் கான் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அவர் மீதான குற்றச்சாட்டை மறுக்கும் இம்ரான் கானும், அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியம்

27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியமும் இந்தாண்டில்தான், நாடாளுமன்றத் தேர்தலை நடத்தியது. ஐரோப்பிய ஒன்றியத்தில் ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, பிரான்ஸ், ஜொ்மனி, கிரேக்கம் உள்பட 27 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அந்த நாடுகளின் அரசுகளுடன் ஐரோப்பிய ஒன்றிய சட்டங்கள் குறித்து கலந்துரையாடுதல் உள்ளிட்டவை ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் முதன்மையான பணிகளாகும்.

ஐரோப்பிய நாடாளுமன்றத் தோ்தல் மூலம், அந்த நாடாளுமன்றத்துக்குத் தங்கள் பிரதிநிதிகளை ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் தோ்வு செய்கின்றனா். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தத் தோ்தலில், மொத்தம் 720 உறுப்பினா்கள் தோ்வு செய்யப்படுவா். இந்த உறுப்பினா்கள் தங்கள் குடிமக்களின் நலன்களை ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவா்; தேர்தலில் வாக்களிக்க சுமார் 373 மில்லியன் மக்கள் தகுதி பெற்றிருந்தனர். இந்தத் தேர்தலில் வான் டெர் லேயனின் ஐரோப்பிய மக்கள் கட்சி அதிக இடங்களைப் பெற்றது. தொடர்ந்து அடையாளம் மற்றும் ஜனநாயகக் கட்சி, ஐரோப்பிய பழைமைவாத மற்றும் சீர்திருத்தவாதக் கட்சி, அரசியலில் சேராத அணிசாராக் கட்சிகளும் வெற்றி பெற்றன.

இலங்கை

இலங்கையில் கரோனா தொற்றுக்கு பிறகான காலகட்டத்தில் மிகப்பெரிய அளவிலான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது; தொடர்ந்து, உள்நாட்டுப் போரும் வெடித்தது. ஒட்டுமொத்த கோபமும் அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபட்ச அரசின் மீது திரும்பியது. இதனையடுத்து, பெரியளவிலான மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த இலங்கை மக்கள், பழைய அரசியல்வாதிகளைத் தூக்கியெறிய வேண்டுமென நினைத்தார்கள்.

இந்த நிலையில்தான், நவம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அநுரகுமார திசாநாயக கட்சியான தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றி பெற்றது. இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 225 இடங்களில் தனிப் பெரும்பான்மை பெற 113 இடங்கள் தேவையென்ற நிலையில், தேசிய மக்கள் சக்தி 140க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 3 இடங்களை மட்டுமே பெற்ற அநுரகுமார திசாநாயக, இந்த முறை 140 இடங்களைப் பெற்றது, வரலாற்றில் இடம்பெறக் கூடியதே. 

தென் கொரியா

தென் கொரியாவில் சமீபத்தில் ராணுவ ஆட்சியை அமல்படுத்துவதாக அதிபர் யூன் சுக் கூறியதற்கு அந்நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், இந்த அறிவிப்புக்கு அவரது கட்சியினரே நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்ததால், சில மணி நேரங்களிலேயே ராணுவ ஆட்சி அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வட கொரிய ஆதரவாளர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காகத்தான், ராணுவ ஆட்சி அமல்படுத்தியதாக அதிபர் யூன் கூறினார். இதனையடுத்து, அதிபர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததால், யூன் பதவி விலகினார்.

இதற்கு முன்னதாகவே, தென் கொரியாவில் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 300 தொகுதிகளில் அப்போதைய எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கூட்டணி 189 இடங்களை வென்றது; ஆளுங்கட்சியான மக்கள் சக்தி கட்சி 111 இடங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது. இதனையடுத்து, பிரதமர் ஹான் டாங் மற்றும் அதிபரின் மூத்த செயலர்கள் பதவியை ராஜிநாமா செய்தனர். இருப்பினும், 200 இடங்களைப் பெற்றால்தான், அதிபரை பதவிநீக்கம் செய்ய முடியும்.

அந்த வகையில், அந்த வாய்ப்பை ஜனநாயகக் கட்சி இழந்தது. இருந்தபோதிலும், மீதமுள்ள 3 ஆண்டுகளுக்கு அதிபர் யூன் சுக் இயோல் தீவிரமான அரசியல் எதிர்ப்பை சமாளித்துக் கொண்டு, பயனற்ற தலைவனாக மட்டுமே இருக்க நேரிடும் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

கனடா

கனடாவில் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற்றவுள்ள நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு பல முனைகளில் இருந்து நெருக்கடி அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, கூட்டணி கட்சிகளின் ஆதரவால்தான், ட்ரூடோ ஆட்சியில் நீடிப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், ட்ரூடோவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக முக்கிய கூட்டணி கட்சி ஒன்று அறிவித்துள்ளது. இதன் காரணமாக, தேர்தல் நடைபெற்றாலும் ஆளும் லிபரல் கட்சி படுதோல்வியை சந்திக்க நேரிடும் என்று கூறுகின்றனர்.

கனடாவில் குடிபெயர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜா கடந்தாண்டு ஜூன் மாதத்தில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் படுகொலை காரணமாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என அந்நாட்டில் உள்ள பலரும் கோரிக்கை விடுத்தனர். மேலும், இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பின் தலைவராக ஹர்தீப் சிங் நிஜ்ஜா அறிவிக்கப்பட்டிருந்ததால், அவரது படுகொலை சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன்

நெருங்கிய அண்டை நாடான உக்ரைன், தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைந்தால் அது தங்களின் தேசியப் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று ரஷியா கூறிவந்தது. இருந்தாலும், அதை பொருள்படுத்தாத ஸெலென்ஸ்கி நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்தார். நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது.

இந்தப் போருக்காக, இதுவரையில் ரஷியா 20,000 கோடி டாலா் (ரூ.16,97,814 கோடி) செலவு செய்துள்ளது என்று ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்தார். இந்த போரில், இதுவரை சுமார் 7,00,000 ரஷிய வீரா்களும், சுமார் 43,000 உக்ரைன் வீரா்களும் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

வங்கதேசம்

வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்களால், அவர் நாட்டைவிட்டு தப்பியோடினார். இதனைத் தொடர்ந்து, அந்நாட்டில் ராணுவமே இடைக்கால அரசுப் பொறுப்பை ஏற்று நடத்தியது. தற்போது, வங்கதேசத்தின் இடைக்கால பிரதமராக முகமது யூனுஸ் பதவியில் உள்ளார்.

வங்கதேச சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து வங்கதேசத்தில் போராட்டம் நடைபெற்றது. மாணவா்கள் பங்கேற்ற இந்தப் போராட்டத்தில், மோதல் ஏற்பட்டு வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன; நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனா்.

இந்த இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக குறைத்து உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்ததைத் தொடா்ந்து, வன்முறை படிப்படியாகக் குறைந்தது. இருப்பினும், இந்தப் போராட்டத்தின்போது மாணவா்களும், பொதுமக்களும் கொல்லப்பட்டதைக் கண்டித்து மீண்டும் போராட்டம் வெடித்ததில் 98 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

2025-ல் தேர்தல்கள் ஒருவேளை குறைந்தாலும்கூட பல்வேறு நாடுகளில் நடைபெறும் பதற்றங்கள் குறையாது என்பதாகத்தான் தோன்றுகிறது!

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular