Friday, January 3, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal News2024இல் உலகில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள்!

2024இல் உலகில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள்!

ஜனவரி

7: வங்கதேசத்தில் நடைபெற்ற தேர்தலில் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்று அதன் தலைவர் ஷேக் ஹசீனா 5-ஆவது முறையாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை படைத்தார்.

9: பிரான்ஸின் புதிய பிரதமராக கேப்ரியல் அட்டலை அதிபர் இமானுவல் மேக்ரான் நியமித்தார்.

11: காஸா போரில் ஹமாஸூக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திவரும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிகக்கா முதல்முறையாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

பிப்ரவரி

9: பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், தடை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி ஆதரவு வேட்பாளர்கள் 95 இடங்களைக் கைப்பற்றி முதலிடம் பிடித்தனர். ஆனால், 64 தொகுதிகளில் மட்டுமே வென்ற பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி பாகிஸ்தான் மக்கள் கட்சியுடன் இணைந்து புதிய அரசை அமைத்தது.

16: ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை கடுமையாக எதிர்த்து வந்த முக்கிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி, சிறையில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

மார்ச்

7: நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் ஸ்வீடன் இணைத்துக் கொள்ளப்பட்டது. உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததைத் தொடர்ந்து பாதுகாப்புக்காக நேட்டோவில் இணைய ஸ்வீடன் விண்ணப்பத்திருந்தது.

19: புவியின் வெப்பநிலையைப் பதிவு செய்யத் தொடங்கிய 174 ஆண்டுகளில் 2024-ஆம் ஆண்டுதான் மிக அதிக உஷ்ணமான ஆண்டு என்று உலக வானிலை அமைப்பு அறிவித்தது.

ஏப்ரல்

14: இஸ்ரேல் மீது ஈரான் 300-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் மீது அந்த நாடு நேரடியாக தாக்குதல் நடத்தியது அதுவே முதல்முறை.

மே

7: ரஷிய அதிபராக விளாதிமீர் புதின் ஐந்தாவது முறையாகப் பொறுப்பேற்றார்.

20: ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தார்

31: தேர்தல் நேரத்தில் தன்னைப் பற்றிய ரகசியத்தைப் பாதுகாப்பதற்காக நடிகைக்கு முறைகேடாக பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அதிபராக இருந்த ஒருவர் மீது குற்றவியல் வழக்கில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது அமெரிக்க வரலாற்றில் அதுவே முதல்முறை.

ஜூன்

3: மெக்ஸிகோவின் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷீன்பாம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

5: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம் மற்றும் மற்றொரு நாசா விஞ்ஞானியுடன் போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றது. இருந்தாலும், அந்த விண்கலத்தில் பழுது ஏற்பட்டதால் அவர்கள் திரும்ப பூமிக்கு வரமுடியாமல் அங்கேயே தங்கியுள்ளனர். ஸ்பேஸ்-எக்ஸ் விண்கலம் மூலம் வரும் மார்ச் மாதம் அவர்களை திரும்ப அழைத்துவர திட்டமிடப்பட்டுள்ளது.

19: சவூதி அரேபியாவில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்ட 80 இந்தியர்கள் உள்பட 922 பேர் அதீத வெயில் காரணமாக உயிரிழந்தனர்.

24: அமெரிக்க அரசுடன் மேற்கொண்ட சட்ட ஒப்பந்தத்தின் கீழ், லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்திலும், பின்னர் சிறையிலும் பல ஆண்டுகளாக அடைபட்டிருந்த விக்கிலீக்ஸ் வலைதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே விடுவிக்கப்பட்டார்.

ஜூலை

01: ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

11: ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அளித்து வந்த நேட்டோ நாடுகள், அந்த நாட்டு அதிநவீன எஃப்-16 விமானங்களை அனுப்பத் தொடங்கியதாக அறிவித்தன.

14: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது நடந்த படுகொலை முயற்சியிலிருந்து குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் நூலிழையில் தப்பினார். அவரை நோக்கி சுடப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளில் ஒன்று அவரின் காதை லேசாக உரசிச் சென்றது.

21: வயது மூப்பு காரணமாக, அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக ஜனநாயகக் கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த அதிபர் ஜே பைடன் அறிவித்தார். அவருக்குப் பதிலாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் கட்சி வேட்பாளராக பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

26: ஒலிம்பிக் போட்டிகள் பிரான்சின் பாரிஸ் நகரில் தொடங்கியது. ஜூலை 26 தொடக்கம் ஆகஸ்ட் 11 வரை இடம்பெற்றது.

29:வெனிசூலாவில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலில் நிக்கோலஸ் மடூரோ மீண்டும் வெற்றதாக அறிவிக்கப்பட்டது. எனினும், இந்தத் தேர்தலில் தாங்கள்தான் வெற்றியடைந்ததாக கூறிய எதிர்க்கட்சிகள், தேர்தல் முடிவை புறக்கணித்தன.

ஆகஸ்ட்

5: வங்கதேசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான விடுதலைப் போரில் பங்கேற்றவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணிகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் நடத்திவந்த போராட்டத்தில் பிரதமர் இல்லத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். அதற்கு முன்னர் ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

8: வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக, நோபல் பரிசு பெற்ற சமூக ஆர்வலரும் தொழிலதிபருமான முகமது யூனுஸ் பொறுப்பேற்றார்.

செப்டம்பர்

17: லெபனானின் ஹிஸ்புல்லா படையினரைக் குறிவைத்து பேஜர்களில் முன்கூட்டியே பொருத்திவைத்திருந்த சிறிய வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 42 பேர் உயிரிழந்தனர். அதையடுத்து, ஹிஸ்புல்லா படையினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பதற்றம் புதிய உச்சத்தை அடைந்தது.

23: இலங்கையின் 10வது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க தெரிவாகினார்.

24: ஸ்ரீமாவோ பண்டாரநாயகவுக்கு அடுத்தபடியாக இலங்கையின் பெண் பிரதமராக ஹரிணி அமர சூரியா பதவியேற்றார்.

அக்டோபர்

17: காஸாவில் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார்.

26: தங்கள் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் ராணுவ நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

நவம்பர்

5: அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார். 78 வயதாகும் டிரம்ப், அமெரிக்காவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மிக அதிக வயதுடையவர் ஆவார்.

19: அணு ஆயுத நாடுகளின் உதவியுடன் அணு ஆயுதமற்ற நாடுகள் தங்கள் மீது தாக்குதல் நடத்தினாலும், அந்த நாட்டின் மீது அணு குண்டு வீச வகை செய்யும் கொள்கை மாற்றத்தை ரஷிய அதிபர் விளாதமீர் புதின் அறிவித்தார். அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளைக் கொண்டு தங்கள் நிலப்பரப்பில் தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அந்த நாடு அனுமதி அளித்ததற்குப் பதிலடியாக இந்த அறிவிப்பை புதின் வெளியிட்டார்.

டிசம்பர்

8: சிரியாவில் 13 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த உள்நாட்டுப் போரில் எதிர்பாராத திருப்பமாக, தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சிப் படையினர் கைப்பற்றினர். அல் அஸாத் குடும்பத்தின் 50 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்தது.

14: அவசரநிலை அறிவித்த விவகாரத்தில் தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோலை நாடாளுமன்றம் பதவிநீக்கம் செய்தது.

26: இந்தியாவின் 13வது பிரதமர் மன்மோகன் சிங் தனது 92வது வயதில் காலமானார்!

30: அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டர் தனது 100ஆவது வயதில் காலமானார்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular