2024 ஆம் ஆண்டு தேர்தல்கள் ஆண்டாக இருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த வருடம் நடத்தப்படும் என விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் பல தரப்பினர் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
“சமகி ஜன பலவேகய (SJB) மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உறுப்பினர்கள் ஏற்கனவே யூ.என்.பி.யுடன் உடன்பாடுகளை எட்டியுள்ளனர். அவர்கள் எங்களுடன் இணைந்து அடுத்த தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளனர்” என்று விஜேவர்தன தெரிவித்தார்.
பணவீக்கம் குறைந்துள்ள போதிலும், பொருட்களின் விலை உயர்வாகவே இருப்பது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
பொருட்களின் விலையை கட்டுப்படுத்த சில வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்துவது அவசியமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தொம்பே தொகுதிக் குழுக் கூட்டத்தில் நேற்று (30) பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.