2026 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பில் தயாரிக்கப்பட்ட வரைபு அறிக்கை அரசாங்க நிதி பற்றிய குழுவில் பரிசீலிக்கப்பட்டது
2026 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பில், பாராளுமன்ற நிலையியல் கட்டளை 121(5)(i) இற்கு அமைவாகத் தயாரிக்கப்பட்ட வரைபு அறிக்கை அரசாங்க நிதி பற்றிய குழுவில் பரிசீலிக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழு (COPF) அண்மையில் (11) பாராளுமன்றத்தில் கூடியபோதே வரைபு அறிக்கை இவ்வாறு பரிசீலிக்கப்பட்டது.
இந்த அறிக்கை அரசாங்க நிதி பற்றிய குழுவின் தொழில்நுட்பக் குழுவினால் தயாரிக்கப்பட்டு குழுவில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதற்கமைய, பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டம் (PFM), பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டம் (PDM), மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளுக்குள் 2026 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், 2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி வரிகள் மூலம் எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தை விட 100 பில்லியன் ரூபா மேலதிக வருமானம் ஈட்டப்பட்டதன் காரணமாக 2026 ஆம் ஆண்டிற்கான எதிர்கால நிதிசார் திட்டங்களை தயாரிப்பது இலகுவாகியுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், வாகன இறக்குமதி வேகம் குறைவடைவதன் காரணமாக, 2026 ஆம் ஆண்டில் வருமான அதிகரிப்பு வேகமும் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அத்துடன், 2026 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பில் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. இதன்போது அந்தப் பிரதிநிதிகள் வரவுசெலவுத்திட்டத்தின் வெளிப்படைத்தன்மை, பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள விதம் மற்றும் தற்போது அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகள் மற்றும் முன்மொழிவுகள் தொடர்பாக தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
அவர்களுடைய அந்த கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் நிதி அமைச்சுக்கு சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று குழுவின் தலைவர் தெரிவித்தார்.


