இன்று நம் நாட்டின் நிலைமை சோகமானதும் துரதிர்ஷ்டவசமானதுமாகவே காணப்படுகின்றன. நாட்டு மக்களுக்கு பல எதிர்பார்ப்புகளை வழங்கி, மக்களை ஏமாற்றி, பொய்யால் வெற்றி பெற்று, இன்று நாட்டின் 22 மில்லியன் மக்களை விரக்தியில் ஆழ்த்தியுள்ளனர். புற்றுநோய் வைத்தியசாலையில் நிலவும் வசதிகளைக் கூட பெற்றுக் கொடுக்கவோ, மருந்துப் பற்றாக்குறையைத் தீர்க்கவோ முடியாது போயுள்ளது. ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனால் மூளைசாலிகள் வெளியேற்றம் சார் பிரச்சினை எழுகிறது. இதற்கும் எந்த தீர்வும் இல்லை. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பயணத்தை விரைவுபடுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொலைநோக்குப் பார்வை இல்லாத ஒரு அரசாங்கத்தால் நாடு ஆளப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியால் இம்முறை புதிதாக தெரிவான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு நேற்று (31) அம்பாறை நகரில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொருட்களின் விலைகள் அதிகரித்து, வருமானம் குறைந்து, தொழிற்சாலைகள் மூடப்பட்டு, மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வரும் சூழ்நிலையில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% பங்களித்து, சுமார் 4 மில்லியன் மக்களுக்கு வாழ்வாதரத்தைப் பெற்றுத் தரும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் சொத்துக்கள் பராட்டே சட்டத்தின் மூலம் ஏலம் விடப்படுகின்றன.
அரிசியில் தன்னிறைவு பெற்றிருந்த ஒரு நாட்டில், தற்போது அரிசிக்கு நியாயமான விலை கூட இல்லாமல் இறக்குமதி செய்யும் நிலைக்கு நாடு சரிந்துள்ளது. நுகர்வோரைப் பாதுகாக்கிறோம் என்ற போலிக்காரணத்தின் கீழ் மோசடிகள் மேற்கொள்ளப்படுவதே இதற்குக் காரணம்.
இன்று, நெல் விவசாயிகள் முதல் சகல விவசாயத்திலும் ஈடுபட்டுள்ள மக்கள் கைவிடப்பட்டுள்ளனர். விவசாயிகளை கோலோட்சுவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த வினைதிறன்ற்ற அரசாங்கம், இன்று விவசாயிகளை நிர்க்கதிக்கு ஆக்கியுள்ளது. இந்த மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளும் நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் நிறைவேற்றப்படவில்லை. ஜனாதிபதி பதவியையும், 159 பெரும்பான்மையையும், உள்ளூராட்சி மன்றங்களில் பெரும்பான்மை அதிகாரத்தையும் வைத்துக் கொண்டிருக்கும்.
இந்த அரசாங்கம் நாட்டிற்காக எதையும் செய்யவில்லை. இது தொடர்ந்தால், 2022 ஆம் ஆண்டு போலவே, நாடு கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் 2028 ஆம் ஆண்டிலும் மீண்டும் வங்குரோத்து நிலையை எட்டும்.
2028 ஆம் ஆண்டு முதல் 5.5 பில்லியன் டொலர் வருடாந்த வெளிநாட்டுக் கடனை அடைக்க வேண்டுமானால் 2025 ஆம் ஆண்டு முதல் 5% பொருளாதார வளர்ச்சி விகிதத்தை பேணிச் செல்ல வேண்டும். புள்ளிவிவரங்களின்படி, இந்த இலக்கை தற்போது அடைய முடியாது. மீண்டும் வங்குரோத்துயடையக் கூடாது என பிரார்த்திக்கின்றேன்.
மக்களின் அழுத்தத்தையும் அதிருப்தியையும் சுரண்டி தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களைப் பெறுவதற்கு நான் தயார் இல்லை. IMF உடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தை திருத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டாலும், புதிய அரசாங்கமாக இந்த அரசாங்கம் அதனைச் செய்யவில்லை. நாட்டு மக்கள் இவற்றை புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.