Monday, March 10, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal News2028 இல் நாட்டின் நிலை இதுதான்!

2028 இல் நாட்டின் நிலை இதுதான்!

மேடைக்கு மேடை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிப் பத்திரத்தை கிழித்தெறிந்த ஜனாதிபதியும் அரசாங்கமுமே தற்போது நாட்டை ஆண்டு வருகின்றது. 2022 இல் நாம் சந்தித்த தேசியப் பேரவலமாக அமைந்த நாட்டின் வங்குரோத்து நிலை ஏற்படும் என யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்கவில்லை.

அன்றைய ஆட்சியாளர்கள் உருவாக்கிய நாட்டிலேயே பெரும்பான்மையினர் மிதந்து கொண்டிருக்கின்றனர். 2028 ஆம் ஆண்டே நாடு எதிர்கொள்ளும் மிகக் கடினமான காலமாக அமையும். 2028 இல் நாம் கடனை செலுத்த வேண்டி இருக்கிறது. இதற்குத் தேவையான பணம் நாட்டில் கையிருப்பில் இருந்தாக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

களனி தேர்தல் தொகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். 

கடனை செலுத்துவதற்கான பணம் அரசாங்கத்தின் வருமானம் மூலம் ஈட்டப்பட வேண்டும். உற்பத்திப் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் இருந்து ஈட்டப்பட வேண்டும். கடந்த காலங்களில் ஐக்கிய மக்கள் சக்தி இந்நாட்டை கட்டியெழுப்ப சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றும், இங்கு எம்மால் செய்ய முடியாத விடயங்களுக்கு இணக்கப்பாடுகளை தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் தொடர்ச்சியாக கூறி வந்தது. ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் தற்போது இணக்கப்பாடு காணப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மக்கள் சார்பான ஒன்றாக மாற்றியமைப்போம் என நாம் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்தோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

* நாட்டை சிக்கலுக்குள் ஆழ்த்தி ஆட்சியை பிடிக்க வேண்டிய எந்த அவசியமும் எமக்கில்லை. 

நமது நாட்டை சிக்கலில் தள்ளி, மக்களின் வாழ்க்கையை சீரழித்து, உயர் பதவிகளுக்கு வர நாம் ஒருபோதும் தயார் இல்லை. அசாதாரணமான, கடினமான இலக்குகளுடனான உடன்பாடுகளை ஏற்படுத்தியதன் காரணமாக ஒரு நாடாக நாம் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளோம். சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு கண்டுள்ள இந்த நிபந்தனைகளைத் திருத்தி, மக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள சுமையை குறைக்க வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தானும் திசைகாட்டியும் இந்த இணக்கப்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான எதிர்பார்ப்புகளை மக்களுக்கு வழங்கினோம். ஆட்சிக்கு வந்த திசைகாட்டியானது ஏலவே இருந்த சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாட்டை எந்த மாற்றமுமின்றி முன்னெடுத்து வருகின்றது. இதன் ஊடாக இந்த அரசாங்கமானது மக்களின் நம்பிக்கைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் துரோகமிழைத்துள்ளது என சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் தொடர்பில் ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையைப் பார்க்கும் போது எந்த அபிமானமும் கொள்ள முடியாது. இன்று சம்பள அதிகரிப்பு தொடர்பான சுற்றறிக்கைகள் வெளியாகும் வரையில் அரச ஊழியர்களால் சம்பள அதிகரிப்பை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

* 6 மாதங்களுக்கு ஒரு தடவை சம்பள அதிகரிப்பு என்பது கனவாகவே காணப்படுகின்றது. 

ஒவ்வோரு 6 மாதங்களுக்கு ஒருமுறையும் 20,000 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுத் தருவதாக கூறிய ஜே.வி.பி அதைச் செய்யாமல், இந்த தருணத்திலும் மக்களை ஏமாற்றி வருகிறது. ஒரு நாடாக நாம் 2 ஆபத்தான நிபந்தனைகளில் கையெழுத்திட்டுள்ளோம். அதாவது, முதன்மை செலவினத்தை 2.3 சதவீதமாகக் கட்டுப்படுத்தவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதன்மைச் செலவினத்தை 13 சதவீதமாக பேணவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இலகுபடுத்திச் சொல்வதானால், மக்களுக்காக அரசாங்கம் செலவிடக்கூடிய தொகையை மிகவும் சுருக்கியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார். 

அரசாங்கம் முன்வைத்த தமது சொந்த கொள்கைப் பிரகடனத்தை துண்டு துண்டாக கிழித்து, முன்னாள் ஜனாதிபதியின் அடிச்சுவடுகளை பின்பற்றிச் செல்ல தீர்மானித்துள்ளதுடன், வழங்கிய வாக்குறுதிகளையும் மீறிக் கொண்டு, போதா குறைக்கு பொய்களையும் உரைத்துக் கொண்டு வருகின்றது. இதனால் மக்களே பெருமளவில் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular