நாட்டில் உள்ள மக்களுக்கு கௌரவத்துடனும் அபிமானத்துடனும் உன்னதமான சுகாதார நலன்களைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் 1000 ஆரோக்கிய மையங்களை (Arogya Wellness Centers) நிறுவும் திட்டத்தின் முன்னோடித் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, 21 மாவட்டங்களில் 42 மையங்கள் எதிர்வரும் 24 ஆம் திகதி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளன.
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் “ஆரோக்கியமான இலங்கை” (Healthy Sri Lanka) எனும் புதிய திட்டத்தின் கீழ் இம்மையங்கள் அமைக்கப்படுகின்றன.
இந்த முன்னோடித் திட்டத்தின் முதற்கட்டமாக 2025 ஆம் ஆண்டு காலி (மாபலகம), இரத்தினபுரி (எத்ஓய), களுத்துறை (தல்பிட்டிய), கண்டி (பொலகொல்லவத்தை) மற்றும் மாத்தளை (கன்கந்த) ஆகிய பகுதிகளில் 5 ஆரோக்கிய மையங்கள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன.
இவ்வாண்டிற்குள் நாடு முழுவதும் 250 புதிய ஆரோக்கிய மையங்களை நிறுவுவதற்கு சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளதுடன், இதற்காக வரவு செலவுத் திட்டத்தில் 1500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 24 ஆம் திகதி மக்கள் பாவனைக்கு வழங்கப்படவுள்ள 42 மையங்களின் மாவட்ட ரீதியான விபரம் பின்வருமாறு:
• கொழும்பு (3), குருநாகல் (3), களுத்துறை (3)
• கம்பஹா (2), கண்டி (2), காலி (2), மாத்தறை (2), ஹம்பாந்தோட்டை (2), மட்டக்களப்பு (2), புத்தளம் (2), பதுளை (2), மொனராகலை (2), அனுராதபுரம் (2), பொலன்னறுவை (2), அம்பாறை (2), கேகாலை (2), நுவரெலியா (2), திருகோணமலை (2)
• இரத்தினபுரி (1), கல்முனை (1), மாத்தளை (1)
களுத்துறை மாவட்டத்தின் கனன்வில மற்றும் ஹீனட்டியங்கல ஆகிய ஆரோக்கிய மையங்களை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ திறந்து வைப்பதன் மூலம் இத்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இந்த ஒவ்வொரு மையத்திலும் ஒரு குடும்ப வைத்தியர், சமூக சுகாதார தாதி உட்பட எட்டுப் பேரைக் கொண்ட சுகாதாரக் குழுவினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மக்கள் இலகுவாக அணுகக்கூடிய இடங்களில் இம்மையங்கள் அமைக்கப்படுவது இதன் சிறப்பம்சமாகும்.
சமூகப் பங்கேற்புடன் இயங்கவுள்ள இம்மையங்கள் ஊடாக, அந்தந்தப் பகுதிகளில் வாழும் மக்களின் சுகாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதும், பொதுமக்களைச் சுகாதார ரீதியாக வலுப்படுத்துவதும் முக்கிய நோக்கங்களாகும்.
குறிப்பாக, தொற்றா நோய்களைக் கண்டறிதல் மற்றும் கட்டுப்படுத்துதல், புற்றுநோய் பரிசோதனை, சிறு சத்திர சிகிச்சைகள், முதியோர் பராமரிப்பு, மறுவாழ்வுச் சேவைகள், ஆரம்ப கண் மற்றும் வாய் சுகாதாரப் பராமரிப்பு, மனநலச் சேவைகள் மற்றும் ஆலோசனை, போசாக்கு சேவைகள் மற்றும் ஆய்வகப் பரிசோதனைகள் உள்ளிட்ட பல ஆரம்ப சுகாதாரச் சேவைகள் இங்கு இலவசமாக வழங்கப்பட உள்ளமை சிறப்பம்சமாகும்.


