Sponsored Advertisement
HomeLocal News33 இலட்சம் பேருக்கு நலன்புரிக் கொடுப்பனவு

33 இலட்சம் பேருக்கு நலன்புரிக் கொடுப்பனவு

நாட்டிலுள்ள 33 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு ஜூலை 1 முதல் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

அதற்கமைய மிக வறியவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள பயளானிகளுக்கு எதிர்வரும் 3 ஆண்டுகளுக்கு 15 000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அதிகாரங்களுக்கமைய இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இடைநிலை, பாதிக்கப்படக்கூடிய, வறிய மற்றும் மிகவும் வறுமையான குடும்பங்களுக்கு 4 பிரிவுகளின் கீழ் கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளதோடு, அங்கவீனமானவர்கள், முதியவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளர்கள் ஆகியோருக்கும் அஸ்வெசும திட்டத்தின் கீழ் நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.

அதற்கமைய தற்காலிக நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருக்கும் 400,000 பேருக்கான 2500 ரூபாய் மாதாந்த கொடுப்பனவு 2023 டிசம்பர் 31 வரையிலும்,  பாதிக்கப்படக் கூடிய 400,000 பேருக்கான 5000 ரூபாய் கொடுப்பனவு 2024 ஜூலை 31 வரையிலும் வழங்கப்படவுள்ளது. மேலும் வறியோர் என்று அறியப்பட்ட பயனாளிகள் 800,000 பேருக்கான 8500 ரூபாய் கொடுப்பனவும் மிக வறுமையானவர்களுக்காக மாதாந்தம் 15,000 கொடுப்பனவும் 2023 ஜூலை 01 முதல் மூன்று வருட காலத்திற்கு வழங்கப்படவுள்ளன.

தற்போது நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளும்72,000 மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்தம் 5000 ரூபாய் வீதமும், சிறுநீரக பாதிப்புக்கான நிவாரணங்களை பெறும் 39,150 பேருக்கு 5000 ரூபாய் வீதமும் முதியவர்களுக்கான கொடுப்பனவுகளை பெறும் 416,667 பேருக்கு 2000 ரூபாய் என்ற அடிப்படையிலும் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.

மேற்படி நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள 340 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து 3,712,096 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு திட்டத்திற்கு தகுதியானவர்களை கண்டறிவதற்கான திட்டத்தில் தகவல்களை சரிபார்க்கும் பணிகளில் 91.5 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

பிரதேச செயலாளர் பிரிவுகளில் மூவர் அடங்கிய தெரிவுக்குழு ஒன்றின் கீழ் தகவல்கள் பரிசீலிக்கப்பட்டு மாவட்டச் செயலாளரின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.

Exit mobile version