கவுதமாலாவில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 51 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றாக இருப்பது கவுதமாலா என்ற நாடு. இங்குள்ள எல் ரான்ச்சோ என்ற கிராமத்தில் இருந்து 75 பயணிகளுடன் பஸ் புறப்பட்டு சான்அகஸ்டின் அகாசகுவாஸ்லான் என்ற பகுதிக்குச் சென்று கொண்டிருந்தது.
பெலிஸ் என்ற பாலத்தில் பஸ் வந்து கொண்டிருந்த போது முன்னே சென்று கொண்டிருந்த கார் மீது மோதி, கட்டுப்பாட்டை இழந்து 20 அடி ஆழம் கொண்ட பள்ளத்தாக்கில் பாய்ந்தது.
இந்த விபத்தில் பஸ்சில் இருந்தவர்களில் 51 பேர் பலியாகி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மீட்புப்படையினர் உதவியுடன் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.


எஞ்சியவர்களின் நிலை என்ன என்பது பற்றிய எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள உள்ளூர் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் குறித்து அந்நாட்டு அதிபர் பெர்னார்டோ அதிர்ச்சியும், கவலையும் தெரிவித்துள்ளார். மீட்புப்பணிகளில் ராணுவத்தினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட உத்தரவிட்ட அவர், 3 நாட்கள் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
