‘பேஸ்புக்’ பயனர்களின் தகவல்கள் கசிந்த விவகாரத்தில் அதன் தாய் நிறுவனமான, ‘மெட்டா’வின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பர்க்கிற்கு எதிராக, 66,000 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்த வழக்கின் விசாரணை நேற்று துவங்கியது.
அமெரிக்காவைச் சேர்ந்த மெட்டா நிறுவனத்தின் கீழ், ‘பேஸ்புக், வாட்ஸாப், இன்ஸ்டாகிராம்’ ஆகிய சமூக ஊடகங்கள் செயல்படுகின்றன. இதில் கோடிக்கணக்கான பயனர்களின் தகவல்கள் உள்ளன.
இந்த தகவல்களை, 2016ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டிரம்புக்காக அரசியல் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிடிகா பயன்படுத்தியது.
இது, அமெரிக்காவின் சட்டப்படி தனியுரிமை மீறல் என சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக 2018ல், அமெரிக்க பார்லிமென்ட்டில் ஆஜராகி பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க் மன்னிப்பு கோரினார். 35,000 கோடி ரூபாய் அபராதம் செலுத்தினார்.
இந்த சம்பவத்தால் பேஸ்புக் நிறுவனத்தின் பங்கு மதிப்பு, 1.36 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சரிவைச் சந்தித்தன. இதனால், ஒவ்வொரு முதலீட்டாளரும் பல ஆயிரம் கோடி ரூபாயை இழந்தனர். அவர்கள், பேஸ்புக் நிறுவனர் மார்க் மற்றும் அதன் தற்போதைய மற்றும் முன்னாள் தலைவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.
அதில், ‘பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் கேம்பிரிட்ஜ் அனாலிடிகாவால் தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயங்கள் குறித்து, மெட்டா எங்களுக்கு தெரியப்படுத்தவில்லை.
இதனால் 66,000 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கூறியுள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை நேற்று துவங்கியது. அதில் மெட்டா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘பயனர் தனியுரிமைக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம்.
கேம்பிரிட்ஜ் அனாலிடிகாவின் ஏமாற்று வேலைக்கு நாங்கள் பலியானோம். வழக்கின் குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டவை’ என்று குறிப்பிட்டுள்ளனர்.