வைத்தியசாலையொன்றில் 7 சிசுக்களை வேண்டுமென்றே கொலை செய்தமை தொடர்பான வழக்கில் பிரித்தானிய தாதி ஒருவர் குற்றவாளி என இங்கிலாந்தின் மென்செஸ்டர் கிறவுண் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் தீர்ப்பளித்துள்ளது.
33 வயதான லூசி லெட்பி எனும் இப்பெண், 2015 ஜூன் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் 5 குழந்தைகளையும் 2016 ஜூன் மாதம் மேலும் இரு குழந்தைகளையும் பல்வேறு முறைகளில் லூசி லெட்பி கொலை செய்தார் எனவும் மேலும் 6 குழந்தைகளை கொல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார் எனவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
ஊசி மூலம் காற்றை செலுத்தியும், பலவந்தமாக பால் கொடுத்தும், இன்சுலின் மூலம் நஞ்சூட்டியும் வேண்டுமென்றே அவர் குழந்தைகளை கொலை செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இங்கிலாந்தின் செஸ்டர் நகரிலுள்ள, கவுன்டஸ் செஸ்டர் வைத்தியசாலையில் 2011ஆம் ஆண்டு முதல் தாதியாக லூசி லெட்பி பணியாற்றினார்.
2015, 2016 காலப்பகுதியில் வழக்குத்துக்கு மாறான எண்ணிக்கையில் சிசுக்கள் உயிரிழப்பது மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
2017 ஆம் ஆண்டில் பொலிஸார் விசாரணையைத் தொடங்கினர். மேற்படி சம்பவங்கள் இடம்பெற்ற நாட்களில் குறித்த வைத்தியசாலை அறையில் தாதி லூசி லெட்பி பணியில் இருந்தமை தெரியவந்தது.
2018 ஆம் ஆண்டு அவரை பொலிஸார் கைது செய்தனர்.
கடந்த ஒக்டோபர் மாதம் நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பமாகின.
இந்திய வம்சாவளி மருத்துவர் ரவி ஜெயராம் இது தொடர்பாக கூறுகையில், குழந்தைகளின் உடலில் ஒட்சின் குறையும் போது, லூசி லெட்பி, எதையும் செய்யாமல், குழந்தைகளை இறக்கவிட்டார் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்’ என்றார்.
தன்மீதான குற்றச்சாட்டுகளை லூசி லெட்பி நிராகரித்தார். எனினும், 7 சிசுக்களை கொன்றமை, 6 சிசுக்களைக் கொல்ல முயன்றமை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் நேற்றுமுன்தினம் தெரிவித்துள்ளது.
நவீன பிரிட்டனின் மிக மோசமான சிறுவர் தொடர் கொலையாளி என லூசி லெட்பி வர்ணிக்கப்படுகிறார்.
லூசி லெட்பிக்கான தண்டனை நாளை திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.