ஏமன் நாட்டில் உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பலியாகினர். 300க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டதும், கூட்டத்தின் ஒருபகுதியில் மின்சார ஒயர் ஷாக் அடித்ததுமே உயிரிழப்புக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
இஸ்லாமிய நாடான ஏமனில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே 2015-ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் தொடங்கியது. மன்சூர் ஹைதி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அலி அப்துல்லா சாலே அதிபராக இருந்து வருகிறார். 8 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் தொடர்ந்து வருகிறது.
உள்நாட்டுப் போரினால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் ஐ.நா அமைப்புகள் அங்கு மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றன. ஏமன் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள நிலையில் இருக்கின்றனர்.
இது ரம்ஜான் நோன்பு காலம் என்பதால் சனாவில் தனியார் சார்பில் உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பள்ளிக்கூடம் ஒன்றில் இந்த நிகழ்ச்சியின்போது உதவிப்பொருட்களைப் பெற ஒரே நேரத்தில் ஏராளமானோர் கூடினர். மக்கள் ஒருவொருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு உதவிகளைப் பெற முயன்றதால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பலியாகினர். 322 பேர் காயமடைந்தனர்.
உயிரிழந்தோரில் பெண்களும், குழந்தைகளுமே அதிகம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.