மன்னர் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் பழைய மாணவரும், எருக்கலம்பிட்டி றினைசன்ஸ் அமைப்பின் ஸ்தாபக உறுப்பினருமான மர்ஹூம் அலாவுதீன் முகம்மது ஹில்மி அவர்களின் நினைவாக மன்னர் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரிக்கு திறந்த வகுப்பறை ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
எருக்கலம்பிட்டி றினைசன்ஸ் அமைப்பின் பூரண அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த திறந்த வகுப்பறை கடந்த 13.06.2022 திங்கட்கிழமை பாடசாலை அதிபர் ஜனாப் N.M. ஷாபி அவர்களின் தலைமையில் பாடசாலை மாணவர்களின் பாவனைக்கு திறந்துவைக்கப்பட்டது.
18.11.1968 ஆம் ஆண்டு பிறந்த மர்ஹூம் அலாவுதீன் முகம்மது ஹில்மி சிறு வயது முதல் கல்வியில் அதிக ஆர்வம்கொண்டு விளங்கியதுடன் விளையாட்டிலும் அதீத திறமைகொண்டவராக திகழ்ந்தார்.
கடந்த ஆண்டு 05.07.2021 எம்மை விட்டும் பிரிந்த மர்ஹூம் அலாவுதீன் முகம்மது ஹில்மி அவர்களின் மறுமை வாழ்வுக்காகவும், சதகத்துல் ஜாரியா எனும் நிரந்தர நன்மையை நாடியும் அவரின் நண்பர்களினால் குறித்த திறந்த வகுப்பறை அன்னாரின் தகப்பனாரும் ஓய்வுபெற்ற ஆசிரியருமான அல்ஹாஜ் M.S. அலாவுதீன் அவர்களின் கரங்களால் திறந்துவைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வின் சிறப்பு அதிதியாக மன்னர் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு. G.D. தேவராஜா கலந்துகொண்டதுடன், எருக்கலம்பிட்டி றினைசன்ஸ் அமைப்பினர், பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி குழுவினர், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் நலன்விரும்பிகளும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.