உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நிதி தொடர்பில் உயர் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவிற்கமைய செயற்படுவதில் நிதி அமைச்சிற்கு எவ்வித சிக்கலும் இல்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முடக்குவதை தவிர்க்குமாறு நிதி அமைச்சின் செயலாளர், நிதி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கு உயர் நீதிமன்றத்தினால் நேற்று (03) வெள்ளிக்கிழமை இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்கப்பட்டது.
நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தேர்தலுக்கான நிதியை வழங்குவது கடினமாகும் என்று ஏற்கனவே திறைசேரி செயலாளரினால் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முடக்குவதை சவாலுக்கு உட்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே உயர் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதற்கமைய இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ,
நீதிமன்ற தீர்ப்பிற்கு சகலரும் மதிப்பளிக்க வேண்டும். நிதி அமைச்சானாலும் , அரசாங்கமானாலும் , அரச நிறுவனங்களானாலும் , தனியார் நிறுவனமானாலும் நீதிமன்ற தீர்ப்பினை ஏற்று அதற்கமைய செயற்பட வேண்டியது அவசியமாகும். அதற்கமைய நிதி அமைச்சு என்ற அடிப்படையில் நாம் பொறுப்புடன் செயற்படுவோம்.
எனவே நீதிமன்ற தீர்ப்பிற்கமைய செலவுகளை ஏற்க வேண்டியேற்படலாம். நீதிமன்ற தீர்ப்பிற்கமைய செயற்படுவதில் நிதி அமைச்சிற்கு எவ்வித சிக்கலும் இல்லை என்றார்.