புத்தர் பௌத்தமதம் தொடர்பில் போதகர் ஜெரோம் பெர்ணாண்டோ தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ள நிலையில் எவரும் எந்த மதத்தையும் அவமதிப்பதற்கு அனுமதிக்க கூடாது என கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அவ்வாறான தனிநபர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
கடந்தவாரம் போதகர் ஜெரோம் பெர்ணான்டோ புத்தர் பௌத்தமதம் குறித்து போதனை செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்ததை தொடர்ந்து பெரும்பான்மை பௌத்தசமூகத்தினர் மத்தியில் சீற்றம் உருவானது.
தன்னைத்தானே இறைதூதராக பிரகடனப்படுத்திய ஜெரோம் பெர்ணாண்டோவிற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்ற வேண்டுகோள்கள் வெளியாகின.
ஜெரோம் பெர்ணான்டோ ஒருபோலி என சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்திருந்த சிலர் அவர் மன்னிப்புகோரவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.நாட்டில் மதஐக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியமைக்காக அவரை கைதுசெய்யவேண்டும் என்ற வேண்டுகோள்களும் எழுந்தன.
குறிப்பிட்ட வீடியோவில் ஜெரோம் பெர்ணான்டோ பௌத்தர்களின் மனது என்பது புத்தரின் அன்பை ஒருபோதும் செவிமடுப்பதில்லை அவர்கள் ஞானம் குறித்தே சிந்திக்கின்றனர் என தெரிவித்திருந்தார்.
ஆனால் ஞானம் பெற ஒளிவேண்டும்,புத்தர் என்ற பெயருக்கு ஞானம் பெற்றவர் என பொருள் அப்படியானால் எது பெரியது ஒளி அல்லது ஞானம் என ஜெரோம் பெர்ணான்டோ குறிப்பிட்ட வீடியோவில் கேள்வி எழுப்பியிருந்தார்.
நான் உலகத்தின் ஒளி என இயேசு கூறியிருந்தார்,நான்; உங்களிற்கு சொல்கின்றேன் இயேசு தான் ஞானம் பெற்றவன் என குறிப்பிடவில்லை எனவும் தெரிவித்திருந்த ஜெரோம் பெர்ணான்டோ இயேசு நான் ஒளி என தெரிவித்தார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
ஆகவே நான் சொல்கின்றேன் புத்தர் உண்மையில் ஒளியை தேடினார் புத்தர் இயேசுநாதரை தேடினார்,புத்தருக்கு இயேசுநாதர் தேவை எனவும் ஜெரோம் பெர்ணாண்டோ தெரிவித்திருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்க நாட்டில் சட்டவிரோத மதவழிபாட்டுத்தலங்கள் உள்ளன அவ்வாறான ஒன்றிலேயே தன்னைத்தானே இறைதூதர் என அழைத்துக்கொள்ளும் ஜெரோம் பெர்ணான்டோ மதநிந்தனை கருத்துக்களை தெரிவித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.