இராமேஸ்வரம் பகுதியில் நடைபெற்ற மீனவர் மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு கச்சத்தீவை மீட்பதே நிரந்த தீர்வாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தாம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தி வருகின்ற போதிலும் இதுவரை எவ்வித தீர்வுகளும் வழங்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கச்சத்தீவு எந்தவொரு காலத்திலும் இலங்கைக்கு சொந்தமானது என வரைபடங்களில் கூட கூறப்படவில்லை எனவும் இந்திய வரைபடத்துடன் இணைக்கப்பட்டதாகவே அது உள்ளதாகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு கச்சத்தீவை தாரைவார்த்தமையின் ஊடாக இந்தியாவை விட தமிழகத்திற்கே அதிகளவான பாதிப்பு ஏற்பட்டுள்ளமையை பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, கச்சத்தீவு விவகாரத்தில் அதற்கான ஒப்பந்தத்தை இரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை தூதரக ரீதியாக பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமெனவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், இலங்கையில் தமிழர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டமையில் இருந்து தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களும் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
2014ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி அமைக்கப்பட்ட பின்னரே தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைகள் அதிகரித்ததாகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.