கடந்த ஆண்டு கென்பெராவில் அறுவை சிகிச்சையின் போது இங்கிலாந்தில் பிறந்த பெண் ஒருவரின் சேதமடைந்த முன் மடல் திசுக்களில் இருந்து “சரம் போன்ற அமைப்பு” வெளியேற்றப்பட்டது.
அதன்பின்னரே குறித்த அமைப்பு புழு என்று கண்டறியப்பட்டது.
சத்திரசிகிச்சை அரங்கில் இருந்த ஒவ்வொருவருக்கும் இது அதிர்ச்சியாக இருந்தது என்று அறுவைச் சிகிச்சை நிபுணர் சஞ்சய சேனாநாயக்க கூறியுள்ளார்.
அத்துடன் விலங்குகளிடமிருந்து மக்களுக்கு பரவும் நோய்கள் மற்றும் தொற்று நோய்களின் பெரும் ஆபத்தை இது எடுத்துக்காட்டுகிறது என்று அவர் எச்சரித்துள்ளார்.
குறித்த பெண், தான் வாழ்ந்த இடத்திற்கு அருகில் உள்ள ஏரிக்கரையில் கீரைகளை சேகரித்த போது இந்த புழு அவரிடம் தொற்றியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் வயிற்று வலி, இருமல், இரவு வியர்த்தல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய் அறிகுறிகள் அவருக்கு ஏற்பட்டன.
அத்துடன் இது மறதியை அதிகரித்து மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், நோயாளி 2021 ஜனவரி மாத பிற்பகுதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் ஸ்கேன் செய்ததில் “மூளையின் வலது முன் மடலில் ஒரு வித்தியாசமான காயம்” கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் 2022 ஜூன் மாதத்தில் குறித்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதே, அவரின் நோய்க்கான காரணம் கண்டறியப்பட்டது.
இதேவேளை, குறித்த சம்பவம் மருத்துவ ரீதியாக ஒரு வரலாற்றை உருவாக்கினாலும் பாதிக்கப்பட்ட பெண் நன்றாக குணமடைந்து வருவதாக பிபிசி செய்திச் சேவை தெரிவித்துள்ளது.