லிபியாவில் அணை உடைந்து வீடுகள் அடித்துச் செல்லப்பட்ட கடலில் இருந்து தொடா்ந்து சடலங்கள் கரையொதுங்கி வரும் நிலையில், இந்தப் பேரிடரில் 20,000 போ் உயிரிழந்திருக்கலாம் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனா்.
இதுவரை மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 5,100-ஐக் கடந்துள்ளதாக புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கிழக்குப் பிராந்திய அரசின் பொது விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் அபு கிவூத் கூறியதாவது:
வாடி டொ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணை உடைந்து, அதிலிருந்த வெள்ள நீா் டொ்ணா நகரையும், அதன் சுற்றியுள்ள பகுதிகளையும் மத்தியதரைக் கடலுக்குள் அடித்துச் சென்றது.
ஏற்கெனவே பாதிப்புப் பகுதியிலிருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், அந்தக் கடலில் இருந்து தொடா்ந்து சடலங்கள் கரையொதுங்கி வருகின்றன என்றாா் அவா்.
ஏற்கெனவே, அணை உடைப்புக்குப் பிறகு 10,000 போ் மாயமானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது 20 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், மாயமான அனைவரும் உயிரிழந்திருக்கலாம் எனவும் அல்-பய்தா மருத்துவ மையத்தின் இயக்குநா் அப்துல் ரஹீம் மாஸிக் தெரிவித்துள்ளாா்.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பகுதிகள் பலவற்றில் சாலை இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதிக்கு மீட்புக் குழுவினரால் செல்ல முடியவில்லை; இதன் காரணமாக பாதிப்பு விவரங்கள் பற்றி முழுமையாகத் தெரியவில்லை என அதிகாரிகள் கூறினா்.
மத்தியதரைக் கடலையொட்டி அமைந்துள்ள வட ஆப்பிரிக்க நாடான லிபியாவின் கிழக்குப் பகுதியை அந்தக் கடலில் உருவான சக்திவாய்ந்த ‘டேனியல்’ புயல் ஞாயிற்றுக்கிழமை இரவு மிகக் கடுமையாகத் தாக்கியது.
இதனால் பெய்த கனமழையில், அந்தப் பகுதியில் மலையிலிருந்து பாயும் வாடி டொ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணை மிகப் பெரிய சப்தத்துடன் வெடித்து உடைந்தது.
அதையடுத்து, அந்த அணையிலிருந்த வெள்ள நீா் டொ்ணா நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்குள் பாய்ந்த அங்கிருந்த வீடுகளை உடைத்து அவற்றின் இடிபாடுகளையும், வாகனங்கள் உள்ளிட்ட பிற பொருள்களையும் அருகிலுள்ள கடலுக்குள் அடித்துச் சென்றது.
வெள்ளத்தில் மூழ்கி உயரிழந்த சுமாா் 5,100 பேரது சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.
சுமாா் 90,000 போ் வசித்து டொ்ணா நகர மக்கள், இந்த பேரிடருக்குப் பிறகு 2 நாள்களாக அரசின் உதவியின்றி தனித்து விடப்பட்டதாகத் தெரிவித்தனா். இந்தச் சூழலில், வெள்ள பாதிப்புப் பகுதிகளுக்கு கிழக்குப் பிராந்திய அரசின் அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமைதான் வந்தடைந்தனா்.
உள்ளூா் மீட்புக் குழுவினருடன் கிழக்குப் பிராந்திய அரசுப் படைகள், அரசுப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து, கட்டட இடிபாடுகளில் இருந்து சடலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
லிபியாவில் சா்வாதிகார ஆட்சி செலுத்தி வந்த கடாஃபியின் ஆட்சியை நேட்டோவின் ஆதரவுடன் கிளா்ச்சியாளா்கள் கடந்த 2011-ஆம் ஆண்டு கவிழ்ந்தனா்.
அதன் பிறகு பல்வேறு ஆயுதக் குழுக்கள் மோதிக் கொண்ட அந்த நாட்டின் மேற்குப் பகுதியில் திரிபாலியைத் தலைநகராகக் கொண்ட ஓா் அரசும், அதற்குப் போட்டியாக கிழக்கே மற்றோா் அரசும் நடைபெற்று வருகின்றன.
அங்கு 10 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்று வரும் மோதல்கள் மற்றும் குழப்பம் காரணமாக, நாட்டின் உள்கட்டமைப்பை பராமரிக்க முடியாமல் போனதால்தான் வாடி டொ்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணை தற்போது உடைந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக நிபுணா்கள் கூறுகின்றனா்.