Sunday, November 24, 2024
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsசர்வதேச குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்று!

சர்வதேச குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்று!

உறுதிமொழிகளில் செயற்படுவோம், குழந்தைத் தொழிலாளர்களை முடிவிற்கு கொண்டு வருவோம்

நாட்டின் நாளைய தலைவர்களை இன்றே பாதுகாப்போம்!

குழந்தைத் தொழிலாளர்களாக 16 கோடி பேர்

கடந்த ஆண்டில் இலங்கையில் 181 குழந்தைத் தொழிலாளர்கள் அடையாளம்

நாட்டின் எதிர்காலத் தூண்களான குழந்தைகளை இளம் வயதில் வேலைக்கு அனுப்புவதைத் தடுத்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வருடந்தோறும் ஜூன்12ஆம் திகதி குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

“நமது உறுதிமொழிகளில் செயற்படுவோம், குழந்தைத் தொழிலாளர்களை முடிவிற்கு கொண்டு வருவோம்” என்பதே இந்த வருடத்திற்கான குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தின் கருப்பொருளாகும்.

குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும் குழந்தைகள் தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்தப்படுதல் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியே.

குழந்தைத் தொழிலாளர்கள் என அடையாளப்படுத்தப்படும் வயது வித்தியாசம் ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடுகின்றது.

ஐக்கிய நாடுகளின் குழந்தைத் தொழிலாளர் சட்டப்படி 16 வயது நிறைவடைவதற்கு முன்பாக குழந்தைகளை பணிக்கு அமர்த்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1990ஆம் ஆண்டில் சோமாலியா தவிர உலகிலுள்ள பிற நாடுகள் அனைத்தும் குழந்தைகள் உரிமைகளுக்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.

அதன் பின்னர் 1999ஆம் ஆண்டு குழந்தைத் தொழில் முறைக்கு எதிரான ஒரு இயக்கம் உருவெடுத்த நிலையில், அதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றிருந்தனர்.

சோமாலியாவை வழிநடத்துவதற்கு முறையான அரசாங்கம் இன்மையினால் தாமதமாக 2002ஆம் ஆண்டு அந்த உடன்படிக்கையில் சோமாலியா கையெழுத்திட்டது.

இதனைத் தொடர்ந்து குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு அதற்கு முற்றிப்புள்ளி வைக்கும் நோக்கத்துடன் குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

குழந்தைத் தொழிலாளர் வரலாற்றில் இன்று 169 நாடுகள் இந்த உடன்படிக்கையை ஒப்புக் கொண்டதற்கு உலகளவில் நடந்த விழிப்புணர்வே மிகப் பெரிய காரணமாகும்.

இந்த நிலையில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் என்பன உலகளாவிய நிலைத்தன்மையை இலக்காகக் கொண்டு 2025ஆம் ஆண்டளவில் சிறுவர் தொழிலாளர்களை உலகில் இல்லாதொழிப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளன.

உலகெங்கிலுமுள்ள 10 குழந்தைகளில் ஒரு குழந்தை, தொழிலாளியாக வஞ்சிக்கப்படுவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

அத்துடன் 16 கோடி பேர் குழந்தைத் தொழிலாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதில் 6.3 கோடி பேர் பெண் குழந்தைத் தொழிலாளர்கள் என ஐக்கிய நாடுகள் சபையினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இலங்கையில் குழந்தைத் தொழிலாளர்கள் உருவாக்கப்படுதல் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்கும் வகையில் நாடாளுமன்றத்தினால் 1998ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஸ்தாபிக்கப்பட்டது.

அத்துடன் மகளிர், சிறுவர்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைச்சு உருவாக்கப்பட்டு சிறுவர்கள் மத்தியில் காணப்படும் பிரச்சினைகளை இல்லாதொழிப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படும் சந்தர்ப்பங்களில் 1929 எனும் அவரச இலக்கத்திற்கு அறிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகுவதற்கு காரணம் அவர்களின் சூழ்நிலையா, பெற்றோரா என்பதை சிந்திக்க வேண்டியது அவசியம்.

கொரோனா பெருந்தொற்று காலம் மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் பின்னரே சிறுவர்களின் பாதுகாப்பு குறைவடைந்துள்ளதாகவும் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகளவில் உருவாகியுள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ரவிராஜ் எமது சூரியன் செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டில் மாத்திரம் இலங்கையில் 181 குழந்தைத் தொழிலாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டாலும் குழந்தைகள் தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்தப்படுதல் இன்றும் ஓயவில்லை என்பது கவலைக்குரிய விடயமே.

ஒவ்வொரு நாட்டிலும் பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளை அந்த நாட்டு அரசாங்கம் பாதுகாக்க வேண்டும். குழந்தைகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு குழந்தைத் தொழிலாளி உருவாகும் நேரத்திலும் நாட்டின் எதிர்காலம் இருள்கின்றது என்பதை யாவரும் நினைவில் வைத்து செயற்பட வேண்டும்.

குழந்தைத் தொழிலாளர்கள் முறைமையை ஒழிப்போம்! நாட்டின் நாளைய தலைவர்களை இன்றே பாதுகாப்போம்!

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Most Popular