ஹமாஸ் அரசியல் பிரிவின் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை (Ismail Haniyeh) இஸ்ரேல் (Israel) கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது விரைவில் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹிஸ்புல்லா, ஹூதி, ஹமாஸ், ஜிஹாத் அமைப்புகள் மற்றும் ஈரான் (Iran) ஒன்றிணைந்து இந்த பயங்கர தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈரானிய அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் லெபனான், ஈராக் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் உள்ள தமது ஆதரவாளர்களை சந்தித்து இஸ்ரேலை தாக்குவதற்கான சிறந்த வழி குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதேவேளை, ஈராக் ஆயுதக் குழுக்களின் உயர்மட்ட உறுப்பினர்களும் ஹிஸ்புல்லா, ஹூதி, இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் ஹமாஸ் அமைப்புகளும் கலந்துரையாடலில் பங்கேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன் படி, சிரியாவில் (Sryia) இருந்து ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி வான்வழித் தாக்குதலுக்கு ஈரான் தயாராகி வருவதாகவும், சிரியாவின் டமாஸ்கஸ் மற்றும் சிரிய பாலைவனங்களில் இருந்து தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட போர் கண்காணிப்புக் குழு எச்சரித்துள்ளது.
மேலும், இஸ்ரேல் மீதான தாக்குதலை நிறுத்துவதற்கு அமெரிக்கப் படையினர் தலையிடாவிட்டால், அவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த வேண்டாம் என அனைத்து அமைப்புகளின் உறுப்பினர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.