புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வாத்தியாசலையாக மாற்றம் பெரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ அலிசப்ரி ரஹீம் மற்றும் சிந்தக்க மாயாதுன்ன தலைமையில் புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
புத்தளம் மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வருகின்ற புத்தளம் தல வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலிசப்ரி ரஹீம் அவர்களினால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோலுக்கிணங்க குறித்த வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.
மேலும் புத்தளத்தில் மீன் பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கத்தில் மீன் பிடி துறைமுகம் ஒன்றை அமைக்கும் யோசனையும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான முன்னெடுப்புகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டமை புத்தளம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நாட்டில் நிரந்தர பொருளாதார அபிவிருத்தியை நிலை நாட்ட தாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டை பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதே தனது பிரதான நோக்கம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.