மருத்துவ அலட்சியத்தால் உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு, இரண்டு மருத்துவர்கள் ரூ.11.42 கோடி இழப்பீடு வழங்க மலேசியா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2019 ஜனவரி 9 மலேசியாவை சேர்ந்த புனிதா மோகன், 36, தனது இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்தார். பிரசவத்திற்குப் பிந்தைய ரத்தப்போக்கால் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு மலேசியா உயர்நீதி மன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கு விசாரணை முடிவில் உயர்நீதிமன்றம் கூறியதாவது:
புனிதாவிற்கு ஜனவரி 9ம் தேதி டாக்டர் ரவியின் மேற்பார்வையில் பிரசவம் நடந்தது. அவர் வலியால் அழத் தொடங்கியபோது நிலைமை மோசமாக மாறியது. அவரது தாயார் பிரசவ அறைக்கு விரைந்தார். புனிதாவுக்கு அதிக ரத்தப்போக்கு இருப்பதைக் கண்டார்.
மருத்துவர்களில் ஒருவர், குழந்தையை பெற்றெடுத்த புனிதா மோகனை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டு, சென்று விட்டார்.இதன் விளைவாக பிரசவத்திற்குப் பிறகு அவர் ரத்தப்போக்கு ஏற்பட்டு இறந்ததாகவும் கண்டறியப்பட்டது.
மருத்துவர்கள் டாக்டர் ரவி, டாக்டர் சண்முகம் மற்றும் பணியில் இருந்த மூன்று செவிலியர்களின் மருத்துவ அலட்சியத்தால் புனிதா இறந்தார். பிரசவத்திற்குப் பிந்தைய வழக்குகளைக் கையாள்வதில் பல வருட அனுபவம் பெற்ற பிறகும், அவர்கள் நோயாளியின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் செவிலியர்களிடம் விட்டுச் சென்றது தெரியவந்துள்ளது.
புனிதாவின் நிலைமை மோசமானபோது, செவிலியர்கள், டாக்டர்களை தேடினர். அப்போது அவர்களை கண்டறிய முடிவில்லை. அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று அறுவை சிகிச்சை அளித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை.
மருத்துவர்கள் பொறுப்புடன் செயல்பட்டிருந்தால் மரணத்தைத் தவிர்த்திருக்கலாம்.
கர்ப்பத்திற்குப் பிறகு அதிகப்படியான ரத்த இழப்பு என்பது அறியப்பட்ட பிரச்சினை. சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டால் எந்தவொரு விரும்பத்தகாத சம்பவத்தையும் தவிர்க்க முடியும். ஆகையால் மருத்துவர்கள் இருவரும் பிரசவித்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.11.42 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.