விண்வெளியில் பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கொள்களை சீனா நினைத்தால் வெறும் 12 மணி நேரத்தில் தாக்கி அழித்துவிட முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்கிற செய்தி ஊடகத்தில் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தற்போது சீனா 99 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் நான்ஜிங் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளிக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் வூ யுன்ஹுவா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இவை அனைத்தும் எலான் மஸ்கின் 1400 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெறும் 12 மணி நேரத்தில் காலி செய்துவிடும். சீன செயற்கைக்கோளில் லேசர், நுண் அலைகளை உருவாக்கும் கருவி, உளவு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம். ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெறுமென நெட்வொர்க் கொடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. தவிர, ராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என சீனா குற்றம்சாட்டி வருகிறது.
அதாவது, உக்ரைன்-ரஷ்யா போரில், உக்ரைன் படைகளுக்கு தகவல்கள் கொடுக்கவும், ரஷ்ய எல்லையை துல்லியமாக கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2022ம் ஆண்டு ரஷ்ய போரின்போது அப்போதைய உக்ரைனின் துணைப் பிரதமரான மைக்கைலோ ஃபெடோரோவ், “ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையை உடனடியாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மஸ்க், “உடனடியாக சேவை வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.
உக்ரைன் போருடன் மட்டுமே ஸ்டார்லிங்க் நிற்காது, நாளை சீனாவுக்கும்-தைவானுக்கும் பஞ்சாயது ஏற்பட்டால் அப்போதும், தைவானுக்கு சப்போர்ட் செய்ய ஸ்டார்லிங்க் வரும். எனவே இந்த கூட்டு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க சீனா இந்த புதிய செயற்கைக்கோள்களை உருவாக்கியிருக்கிறது.
கடந்த 2023ம் ஆண்டு இதற்கான பணிகளை சீனா தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ‘கியான்ஃபான் மெகா-விண்மீன் திட்டம்’ (Qianfan mega-constellation project) என்றும் பெயரிட்டிருந்தது. நோக்கம் உலகம் முழுவதும் இணைய தொடர்பை வழங்குவதாகும். இதற்காக மொத்தம் 15,000 சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவ சீனா முடிவெடுத்தது. இதன் முதல் தொகுப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்டது. இதில் 18 செயற்கைக்கோள்கள் இருந்தன.
ஒவ்வொன்றும் சுமார் 300 கி.கி எடையில் இருந்தது. இவை பூமியிலிருந்து 800 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதேபோன்று 2024 டிசம்பரில் அடுத்து இரண்டு தொகுதி ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. தற்போது மொத்தம் 99 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன. 15,000 செயற்கைக்கோள்களை 3 கட்டங்களாக ஏவ இருக்கிறது. முதல் கட்டத்தில் 1,296 செயற்கைக்கோள்கள் ஏவப்படும். இதில் 648 செயற்கைக்கோள்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.