அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
‘டிக் டாக்’ எனப்படும், மொபைல்போன் செயலி உலகளவில் பிரசித்தம். இசை, நடனம், நடிப்பு உள்ளிட்ட திறமைகளை வெளிக்காட்டும் களமாக இது இருப்பதால் வயது வித்தியாசம் இன்றி பல்வேறு தரப்பினரும் இதை பயன்படுத்துகின்றனர். சீனாவைச் சேர்ந்த ‘ பைட்டான்ஸ்’ என்ற நிறுவனம் இந்த செயலியை நிர்வகித்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த செயலிக்கு இந்திய அரசு தடை விதித்தது.
அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலிக்கு ஜோ பைடன் அரசு சமீபத்தில் தடை விதித்தது. இந்த தடை இந்த வார இறுதியில் அமலுக்கு வருகிறது.
இதை எதிர்த்து, அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் டிக் டாக் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், இது குறித்து கொண்டு வரப்பட்ட சட்டமானது, பேச்சுரிமைக்கான அரசின் கட்டுப்பாடுகள் தொடர்பான அரசியலமைப்பை மீறவில்லை எனக்கூறியுள்ளது.
இதனால், இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் இந்த செயலிக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.