இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனாவை வங்கதேசம் அழைத்து வருவோம்; தேவையெனில் இதற்காக சர்வதேச நாடுகளின் உதவியையும் நாடுவோம்’ என வங்கதேச அரசு தெரிவித்துள்ளது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தை தொடர்ந்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நம் நாட்டில் தஞ்சமடைந்தார்.
இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. இதையடுத்து முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை மற்றும் ஊழல் வழக்கு பதியப்பட்டது.
அவருக்கு எதிராக கைது வாரன்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அவரை வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்பும்படி கடந்த ஆண்டே துாதரகம் வாயிலாக மத்திய அரசிடம் அந்நாடு வலியுறுத்தியது.
இந்நிலையில், வங்கதேச அரசின் சட்ட ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ”ஷேக் ஹசீனாவை வங்கதேசம் அழைத்து வர எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் கையில் எடுத்துள்ளோம்.
”ஹசீனாவை இந்தியா திருப்பி அனுப்ப மறுத்தால், அது இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்படைப்பு ஒப்பந்தத்தை மீறும் செயல். இந்த விவகாரத்தில் தேவையெனில் சர்வதேச நாடுகளின் உதவியை நாடுவோம்,” என்றார்.