ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசிய கட்சியும் ஏதேனுமொரு வகையில் அரசியல் இணக்கப்பாட்டினை எட்ட வேண்டும் என்று இரு கட்சிகளினதும் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே தலைமைத்துவம் மற்றும் சின்னம் தொடர்பில் முரண்பட்டுக் கொள்ளாது இணைந்து பயணிப்பதே எமது இலக்காகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
கண்டியில் புதன்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசிய கட்சியும் ஏதேனுமொரு வகையில் அரசியல் இணக்கப்பாட்டினை எட்ட வேண்டும் என்று இரு கட்சிகளினதும் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று நாம் நம்புகின்றோம். இதன் பிரதான இலக்கு இணக்கப்பாட்டுடன் இணைந்து செயற்படுவதாகும்.
உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்த தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை. எதிர்கால பேச்சுவார்த்தைகள் ஊடாக இது குறித்த இறுதி தீர்மானத்தை எட்டுவதற்கு எதிர்பார்க்கின்றோம். கூட்டணியொன்றை அமைப்பதற்கு இணக்கப்பாட்டை எட்ட முடியும்.
ஐக்கிய மக்கள் கூட்டணியை மேலும் விரிவுபடுத்தி அதில் ஏனைய பல கட்சிகளையும் இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளோம். எவ்வாறிருப்பினும் இது இறுதி தீர்மானம் அல்ல. சின்னம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் இறுதி கட்டத்திலேயே தீர்மானிக்கப்படும். அதேவேளை தலைமைத்துவம் தொடர்பில் விவாதித்துக் கொண்டு ஒன்றிணைவதற்கான சந்தர்ப்பத்தை நழுவ விடுவதற்கும் நாம் தயாராக இல்லை.
தேசிய தேர்தலொன்று வரும் போது அவை தொடர்பில் சிந்திக்கலாம். அதுவரை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் அதற்காக அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.