முன்னேற்றத்திற்கும் அபிவிருத்திக்கும் தேவையான அனைத்து வளங்களையும் எம் நாடு இயற்கையாகவே பெற்றுக்கொண்டிருக்கின்றபோதிலும் கடந்த 76 வருட காலமாக அந்த வளங்கள் முறையாகப் பயன்படுத்தப்படவில்லையென, தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே. முஹம்மத் பைசல் தெரிவித்தார்.
கடந்த 23 ஆம் திகதி, இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுச் சட்டம், (2) துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டம், (3) செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டச் சட்டம் ஆகிய மூன்று சட்ட ஏற்பாடுகளின் கீழ் நான்கு கட்டளைகள் மற்றும் ஒழுங்குவிதிகள் மீதான பாராளுமன்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,
முன்னேற்றத்திற்கும் அபிவிருத்திக்கும் தேவையான வளங்களை எம் நாடு இயற்கையாகவே பெற்றுக்கொண்டிருக்கிறது. இருந்த போதிலும் கடந்த 76 வருட காலப்பகுதியில் அந்த வளங்கள் முறையாகப் பயன்படுத்தப்படாதுள்ளன.
குறிப்பாக நான் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற புத்தளம் மாவட்டத்திலும் புத்தளம் தொகுதியிலும் கூட பல வளங்கள் இயற்கையாகவே காணப்படுகின்றன.
புத்தளம் மாவட்டத்தில், கடற்றொழில், உப்புக் கைத்தொழில், புத்தளம் களப்பை அடிப்படையாகக் கொண்ட இறால் மற்றும் மீன் வளர்ப்பு தொழில், விவசாயம், தென்னை, சுற்றுலா உள்ளிட்ட தொழிற்றுறைகளுக்கான வசதிகள் தாராளமாகவுள்ளபோதிலும் அவை முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை.
மேலும், இந்நாட்டில் காணப்படும் இல்மனைட் போன்ற சில வளங்கள் முடிவுப் பொருளாக அன்றி மூலப் பொருளாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் இலங்கை பெற்றுக்கொள்ளும் வருமானம் மிகவும் குறைவாகும். அந்த மூலப் பொருளை முடிவுப் பொருளாகவும் பெறுமதி சேர் பொருளாகவும் ஏற்றுமதி செய்தால் தற்போது கிடைக்கப்பெறுவதை விடவும் பல மடங்கு இலாபத்தை இந்த நாடு பெற்றுக் கொள்ளும்.
இவை தொடர்பாக கடந்த 76 வருடங்களாக நாட்டை ஆட்சி செய்த அரசியல் தலைவர்களும் அரசியல் வாதிகளும் கவனம் செலுத்தவில்லை. அவர்கள் தங்கள் நலன்களுக்கும் கட்சி நலன்களுக்கும் தான் முன்னுரிமை அளித்து செயற்பட்டனர். நாம் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றுக்கொள்ளும் போது பொருளாதார ரீதியில் ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்த இடத்தில் இருந்தோம். அக்காலப் பகுதியில் பொருளாதார ரீதியில் இலங்கையை விடவும் பல மடங்கு கீழ் மட்டத்தில் இருந்த பல நாடுகள் இப்போது இலங்கையை விடவும் பல மடங்கு முன்னேற்றமடைந்த நாடுகளாக மாறியுள்ளன. எனினும் நாம் 76 வருடங்களாகியும் மூன்றாம் மண்டல நாடாகவும் வளர்முக நாடாகவும் இருந்து வருகின்றோம். இந்நிலையில், இந்நாட்டை ஏற்றுமதி பொருளாதார நாடாக கட்டியெழுப்புவதும் எமது அரசின் இலக்காகும். எமது ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்தில் அந்த இலக்கை அடைந்து நாட்டு மக்களுக்கு வளம் நிறைந்த சுபீட்சமான தேசத்தை உருவாக்கிக் கொடுப்போம் என அவர் தெரிவித்தார்.