மகனின் தாக்குதலுக்கு இலக்காகி தந்தை ஒருவர் உயிரிழந்த சம்பவம் உடப்பு பொலிஸ் பிரிவின் பெரியகொலனி பகுதியில் நேற்று (01) அதிகாலையில் பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவர் உடப்பு, ஆடிமுனை பகுதியைச் சேர்ந்த 63 வயதான நபர் என தெரியவந்துள்ளது.
பெரியகொலனி பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த ஒருவர், உடல்நலக்குறைவு காரணமாக உடப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்துவிட்டதாக உடப்பு பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
உடலைப் பரிசோதித்த சட்டவைத்திய அதிகாரி, இது சந்தேகத்திற்கிடமான மரணம் என்றும், நீதவான் விசாரணை தேவை என்றும் அறிவித்துள்ளார்.
அதன்படி, முன்னெடுத்த விசாரணையில், இந்த மரணம் ஒரு கொலை என்றும், தந்தை உறங்கி கொண்டிருந்த போது மகன் தந்தையின் மார்பில் கத்தியால் குத்தியுள்ளமையும் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணையில் இறந்தவரின் மகன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், அன்று அவரது சிகிச்சைகாக தந்தை வராததால் ஏற்பட்ட கோபத்தில் தந்தையை அவர் கத்தியால் குத்தியதாகவும் தெரியவந்தது.
சடலம் புத்தளம் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், குற்றத்தைச் செய்த சந்தேகநபரான 20 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.