பாடசாலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய 8 வயது சிறுமி ஒருவரை கேக் கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவமொன்று இந்தியாவில் பதிவாகியுள்ளது.
இந்தியாவின் கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் புறநகர் பகுதியில் வசித்து வருபவர் 8 வயது சிறுமி.
மேலும் அந்த பகுதியில் உள்ள அரசாங்க பாடசாலையில் 3-ம் வகுப்பு படித்து வரும் குறித்த சிறுமி கடந்த 31-ஆம் திகதி பாடசாலை முடிந்து வீட்டுக்கு புறப்பட்ட போது, பாடசாலை வளாகத்துக்குள் புகுந்த 3 மர்ம நபர்கள், சிறுமிக்கு சாப்பிட கேக் கொடுத்துள்ளனர். பின்னர் சிறிது நேரம் சிறுமியுடன் விளையாடிய அவர்கள், திடீரென கத்தியை காட்டி சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதனால் பயந்துபோன சிறுமி செய்வதறியாது திகைத்து நின்றாள். அப்போது அந்த மர்ம நபர்கள் 3 பேரும் சிறுமியை பாடசாலை வளாகத்தில் உள்ள மறைவான இடத்துக்கு தூக்கிச்சென்று அங்கு வைத்து கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்தனர்.
பின்னர் நடந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்றும், சொன்னால் கொன்று விடுவோம் என்றும் மிரட்டி சிறுமியை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் பயந்து போன அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை யாரிடமும் கூறாமல் இருந்துவிட்டாள்.
இந்த நிலையில் நேற்று காலையில் சிறுமிக்கு பயங்கர வயிற்று வலியும், இரத்தப்போக்கும் ஏற்பட்டது. இதனால் பதறிப்போன சிறுமியின் சித்தி, அவளிடம் விசாரித்தார். அப்போது சிறுமி தன்னை 3 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துவிட்ட கொடுமையை கண்ணீர் மல்க கூறினாள்.
அதையடுத்து சிறுமியின் சித்தி உடனடியாக இதுபற்றி மண்டியா டவுனில் உள்ள மகளிர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் பொலிசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மண்டியா மிம்ஸ் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அந்த மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.