டாக்கா, வங்கதேசத்தில் வன்முறை சம்பவங்கள் நீடித்த நிலையில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தலைவர்களின் வீடுகள் குறிவைத்து தாக்கப்பட்டு வருவதால் பதற்றம் நிலவுகிறது.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாத இறுதியில், இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
அரசுக்கு எதிராக கடும் நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, வங்கதேசத்தை விட்டு வெளியேறி நம் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார்.
ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து, பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு வங்கதேசத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில், இணையதளம் வாயிலாக ஷேக் ஹசீனா தன் கட்சி நிர்வாகிகளுடன் கடந்த 5ம் தேதி இரவு உரையாற்றினார். அப்போது, இடைக்கால அரசுக்கு எதிராக போராட அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.
அன்றிரவு முதல் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
டாக்காவில் உள்ள வங்கதேச நிறுவனரும், முன்னாள் அதிபருமான ஷேக் முஜிபுர் ரஹ்மான் வீடு முன் குவிந்த ஆயிரக்கணக்கான மாணவர் அமைப்பினர், அவரின் பூர்வீக வீட்டை சூறையாடி எரித்தனர்; புல்டோசர் வைத்து தரைமட்டமாக்கினர்.
தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நீடித்தன. டாக்காவின் பனானியில் உள்ள அவாமி லீக் ஆட்சிக் குழு உறுப்பினர் ஷேக் சலீம் வீட்டிற்கு சென்ற போராட்டக்காரர்கள், அவரது வீட்டை தீ வைத்து எரித்தனர்.
நோகாலியின் கம்பனிகஞ்ச் பகுதியில் உள்ள அவாமி லீக் கட்சியின் பொதுச் செயலர் ஒபைதுல் குவாடரின் வீடும் தீ வைத்து எரிக்கப்பட்டது.
அருகில் இருந்த அவரது சகோதரர் அப்துல் மிர்சாவின் இரண்டு மாடி கட்டடமும் சூறையாடப்பட்டது. அங்கிருந்த முன்னாள் மேயர் ஷஹாதத் மிர்சாவின் வீடும் இந்த சம்பவத்தின் போது தீக்கிரையானது.
ராஜ்ஷாஹி மாவட்டம் சக்சிங்கா மொஹாலியில் இருந்த அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷாஹ்ரியார் ஆலமின் மூன்று மாடி கட்டடத்துக்கு, போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.


பாகா, சார்காட், பாப்னா உட்பட 12க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்த அவாமி லீக் கட்சி நிர்வாகிகளின் வீடுகள் எரிக்கப்பட்டன. தீ எரிப்பு சம்பவங்களின் போது, அந்தந்த வீடுகளில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
குமிலா மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற சுவரில் வரையப்பட்டிருந்த ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சுவரோவியம் புல்டோசர் வைத்து இடிக்கப்பட்டது.
நரசிங்கடியில் இருந்த அவாமி லீக் கட்சி அலுவலகமும் இடித்து தள்ளப்பட்டது.
பாகர்ஹாட்டில், முக்திஜோத்தா வளாகம், நகராட்சி பூங்கா, ஷாஹீத் மினார், மோங்லா பரிஷத் வளாகம், மோங்லா குழந்தைகள் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் முஜிபுர் ரஹ்மானின் ஓவியங்கள் சேதப்படுத்தப்பட்டன.
இது குறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், “பாசிசத்தின் அடையாளமாக திகழும் ஷேக் ஹசீனா தொடர்பான எந்த விஷயத்தையும் தடயமின்றி தகர்ப்பதே எங்கள் நோக்கம்,” என, தெரிவித்தனர்.
