ஆற்றில் விழுந்தவரை காப்பாற்றிய பைலாங் என்ற குதிரைக்கு, சீன அரசு சார்பில் ஆற்றின் கரையில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள சியான்டாவோ நகரில் பைலாங் என்று பெயரிடப்பட்ட குதிரையும், அதன் உரிமையாளர் யிலிபாயும் பயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது, ஆற்றின் பாலத்தில் இருந்து ஒருவர் ஆற்றுக்குள் தவறி விழுவதை கண்டனர்.
ஆற்றங்கரையில் நின்றிருந்த அந்த நபரின் மகள் உதவிக்காகக் கூச்சலிட்டாள். உடனே சற்றும் தயக்கமின்றி, பைலாங்கில் சவாரி செய்த யிலிபாய், குதிரையை ஆற்றில் வழிநடத்தினார். ஆபத்து இருந்தபோதிலும், பைலாங் 40 மீட்டருக்கு மேல் தண்ணீரில் நீந்தியது.
யிலிபாய் ஒரு கையில் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டு, மற்றொரு கையில் நீரில் மூழ்கிய நபரை இழுத்து காப்பாற்றினார். இந்த வியத்தகு மீட்பு சம்பவம், ஒரு வைரல் வீடியோவில் பதிவாகி இருந்தது.

துணிச்சலான மீட்பு சம்பவம் நடந்த ஆறு நாட்களுக்குப் பிறகு, பைலாங் கடுமையாக நோய்வாய்ப்பட்டது. கடுமையான காய்ச்சலில் அவதிப்பட்ட குதிரைக்கு சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவர்களை தீவிர முயற்சி மேற்கொண்டனர். முயற்சிகள் செய்த போதும், குதிரை பிப்ரவரி 11 அன்று இறந்தது.
யிலிபாய் கூறியதாவது:பைலாங் புத்திசாலி. நான் அதற்கு ஒரு சவுக்கை சுண்டியதுமே அது தண்ணீருக்குள் தைரியமாக செல்லத் தொடங்கியது. நீரில் மூழ்கும் மனிதனை நான் இழுப்பதைப் பார்த்த பிறகு, அது திரும்பி நீந்தியது. என் குதிரையும் நானும் ஒரு குடும்பம் போல. நான் அதை நம்பினேன், அதுவும் என்னை நம்பியது.
பைலாங்கின் மரபை மதிக்கும் வகையிலும், அதன் துணிச்சலை அங்கீகரிக்கும் விதமாக, சியான்டாவோ நகர நிர்வாகம், ஆற்றின் அருகே ஒரு சிலையை அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

