உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் விசேட பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் விசேட பெரும்பான்மையுடன் திருத்தங்கள் இன்றி பாராளுமன்றத்தில் இன்று (17) நிறைவேற்றப்பட்டது.
உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தில் அரசியலமைப்பின் 79வது உறுப்புரைக்கு அமைய கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (17) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
இந்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இன்று பி.ப 2.00 மணி முதல் பி.ப 7.00 மணிவரை இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது மதிப்பீட்டுக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 187 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக எந்த வாக்குகளும் அளிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து குழுநிலையில் சட்டமூலம் கருத்திற்கொள்ளப்பட்டதுடன், அதன் பின்னர் சட்டமூலத்திற்கான மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது சட்டமூலத்திற்கு ஆதரவாக 158 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக எந்த வாக்குகளும் அளிக்கப்படவில்லை. அதற்கமைய, உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மற்றும் மூன்றாம் மதிப்பீடு விசேட பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அதற்கமைய இந்த சட்டமூலம் 2025 ஆம் ஆண்டில் 1 ஆம் இலக்க உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமாக அமுலுக்கு வரவுள்ளது.
