Sunday, February 23, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsசிலவத்துறை குறித்து ஆதங்கம் வெளியிட்ட ஹக்கீம்!

சிலவத்துறை குறித்து ஆதங்கம் வெளியிட்ட ஹக்கீம்!

சிலாவத்துறை கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பூர்வீகக் காணிகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைத்துவிடுங்கள்.

ஜனாதிபதியிடம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் வேண்டுகோள்..

மன்னார், சிலாவத்துறை கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் பூர்வீகமாக வாழ்ந்துவந்த பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளையும், அவர்களது உடைமைகளையும் அவற்றின் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைத்து விடுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று வியாழக்கிழமை(20) பாராளுமன்றத்தில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தின்போதே பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஜானதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரஸ்தாப, பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்குழு கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“இந்த சிலாவத்துறை கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பாரிய நிலப்பிரதேசம் யுத்தம் நிகழ்ந்து வந்த1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அங்கிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து பழைய சிலாவத்துறை கிராமம் பெரும்பாலும் அரசாங்கத்தினால் கடற்படைக்கு கையகப்படுத்தப்பட்டு, இன்னும் தொடர்ந்து பல்லாண்டுகளாக நாங்கள் விடுத்து வருகின்ற வேண்டுகோள்களை முற்றாகப் புறக்கணித்து அரசாங்கத்தினால் கடற்படை முகாமாக பயன்படுத்தப்பட்டு வருவதனால், அவற்றின் உண்மையான உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, பாரம்பரிய கலாசாரப் பின்னணியைக் கொண்ட இந்தப் பாரிய நிலப்பரப்பு எதிர்கால சந்ததிகளுக்கு இல்லாமல் போகக்கூடிய அபாயம் நிலவுகிறது.

இடம்பெயர்ந்தவர்களில் கணிசமானோர் பின்னர் மீளக் குடியேறியுள்ள போதிலும் , அவர்கள் தங்களுக்குச் சொந்தமான காணிகளை விவசாயச் செய்கை பண்ணவோ, அவற்றை உரிய முறையில் பயன்படுத்தவோ, அங்கு முன்னர் போன்று வழமையான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடவோ முடியாதுள்ளனர். வேலி கட்டியும், அரண் அமைத்தும் மிகப் பெறுமதி வாய்ந்த இந்த நிலப்பரப்பை தொடர்ந்தும் அரசாங்கம் கடற் படை முகாமாக விஸ்தரித்திருப்பது அநீதியானது.

இந்தப் பாரதூரமான விஷயத்தைப் பற்றி நாங்கள் முறையிடுகின்ற நான்காவது ஜனாதிபதியாக நீங்கள் இருக்கிறீர்கள். ஆகவே இதனால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் முகமாக, உரிய சிலாபத்துறை கடற்படை முகாமிற்கு ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பரப்பையும், அங்கு வசித்து வந்தவர்களுக்குரிய உடைமைகளையும் அவற்றின் உண்மையான உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைத்து விடுமாறு உங்களிடம் வேண்டிக் கொள்கிறேன் என்றார்”.

அதனைத் தொடர்ந்து, இவ்வாறே திருகோணமலையிலும் மாபல் பீச், வெள்ளை மணல், குடாக் கரை கடலோரம் மிகவும் வனப்புமிக்கவை. விமானப்படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அதனை உல்லாச பயணிகளை ஈர்க்கும் விதத்தில் பயனுள்ளதாக முதலீடுகளை மேற்கொண்டு அபிவிருத்தி செய்வதற்கு முடியாமல் இருப்பதாகவும், அத்துடன், பிரதேச மக்களின் அன்றாட வாழ்வாதார நடவடிக்கைககள் பாதிக்கப்படுவதாகவும் மு.கா தலைவர் ஹக்கீம் ஜனாதிபதியிடத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்கு பொதுமக்கள் செல்வது கட்டுப்படுத்தப்படுத்தப்படுவது பற்றி கூறியபோது, அது தளர்த்தப்பட்டுள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்திருக்கிறார். தகர்க்கப்பட்ட பள்ளிவாசலின் அமைவிடம் உட்பட்ட கருமலையூற்று (Deadsman Cove) கடலோரப் பிரதேசத்தின் நிலைமையையும் அவர் சுட்டிக் காட்டினார். இந்த பிரச்சினைகள் பற்றியும் உரிய கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த அனர்த்த முகாமைத்துவ சபை கடந்த மூன்று வருடங்களாக கூட்டப்படாமல் இருப்பது பற்றி ஜனாதிபதியின் கவனத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கொண்டு வந்தபோது, அதற்குரிய புதிய உறுப்பினர்கள் பெயரிடப்பட்டு, அதன் பின்னர் அதனை மீண்டும் இயங்க வைப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ள்ளார்.

M.N.M. யசீர் அரபாத் (BA) ஓட்டமாவடி

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular