இலங்கையை உலகில் இணையான போட்டியாளராக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் – The Innovation Island Summit – 2025 மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு
புத்தாக்கத் துறையில் இணையான போட்டியாளராக இல்லாத இலங்கையை, ஏனைய நாடுகளுடன் இணையான போட்டியாளராக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், இந்த இலக்கை அடைவதில் டிஜிட்டல் மயமாக்கல் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இதற்காக புத்தாக்கத் துறையில் ஒரு பெரிய மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.கொழும்பில் உள்ள ITC ரத்னதீப ஹோட்டலில் நேற்று (20) நடைபெற்ற The Innovation Island Summit – 2025 மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
இலங்கையில் Innovation Island Summit – 2025 மாநாட்டை நடத்துவதால், இந்த நாட்டில் புதிய தொழில்முனைவோரின் புத்தாக்க ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் பிரதிபலிப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, மனித நாகரிகத்தின் பல்வேறு நிலைகளை நாம் அடையாளம் கண்டுள்ளோம் என்றும், அந்த மனித நாகரிகத்தின் ஒவ்வொரு புதிய அத்தியாயமும் புத்தாக்கத்தின் மூலம் எழுதப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.
