அமெரிக்க அதிபர் டிரம்புடனான பதட்டமான மோதலுக்கு ஒரு நாள் கழித்து, ‘ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைனின் போராட்டத்தில் அமெரிக்கா அளித்த அசைக்க முடியாத ஆதரவிற்கு நன்றி. டிரம்பின் ஆதரவு முக்கியமானது’ என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே வெள்ளை மாளிகையில் நடந்த பேச்சுவார்த்தையின் போது வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் டிரம்பின் உத்தரவு படி ஜெலன்ஸ்கி வெளியேற்றப் பட்டார். டிரம்பால் அவமதிக்கப்பட்டதாக கருதப்படும் ஜெலன்ஸ்கிக்கு ஆறுதலாக ஐரோப்பிய நாடுகள் கைகோர்த்துள்ளன. அமெரிக்காவின் துணை இல்லாமல் ரஷ்யாவுடன் நடக்கும் போரில் இந்த நாடுகள் எதுவும் செய்துவிட முடியாது என்ற எதார்த்தம் பலருக்கும் புரிகிறது.
ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைனின் போராட்டத்தில் அமெரிக்கா அளித்த அசைக்க முடியாத ஆதரவிற்கு நன்றி. டிரம்பின் ஆதரவு முக்கியமானது. அவர் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறார். ஆனால் நம்மை விட வேறு யாரும் அமைதியை விரும்பவில்லை. உக்ரைனில் இந்தப் போரில் வாழ்வது நாம் தான். இது நமது சுதந்திரத்திற்கான போராட்டம், நமது உயிர்வாழ்விற்கான போராட்டம்.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஒரு கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயாராக இருக்கிறேன். அமெரிக்கா அளித்த அனைத்து ஆதரவிற்கும் நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். பாதுகாப்பு உத்தரவாதங்கள் இல்லாத போர்நிறுத்தம் உக்ரைனுக்கு ஆபத்தானது. நாங்கள் 3 ஆண்டுகளாக போராடி வருகிறோம். அமெரிக்கா எங்கள் பக்கம் இருப்பதை உக்ரைன் மக்கள் அறிந்து கொள்ள விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.