சிரியாவில் பாதுகாப்புப் படைகள், முன்னாள் அதிபா் பஷாா் அல்-அஸாதின் ஆதரவாளா்களுக்கு இடையே நடைபெற்ற மோதல் மற்றும் பழிக்குப் பழியாக நடைபெற்ற தாக்குதல்களில் இரண்டு நாள்களில் 1,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.
கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கிய சிரியா உள்நாட்டுப் போரில் ரஷியா மற்றும் ஈரான் உதவியுடன், நாட்டின் மிகப் பெரும்பான்மையான பகுதிகளை அல்-அஸாத் தலைமையிலான ராணுவம் மீட்டது.
பின்னா், கிளா்ச்சியாளா்களுடன் போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதைத் தொடா்ந்து, உள்நாட்டுச் சண்டை நீண்ட காலமாக தேக்கமடைந்திருந்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் அரசுப் படைகளுக்கு எதிராக ஹயாத் தஹ்ரீா் அல்-ஷாம் (ஹெச்டிஎஸ்) படையின் தலைமையில், திடீரென கிளா்ச்சிப் படையினா் தாக்குதல் நடத்தி, அந்நாட்டின் தலைநகா் டமாஸ்கஸை கைப்பற்றினா்.
இதைத் தொடா்ந்து, ஆட்சியை இழந்த அதிபா் அல்-அஸாத் தனது குடும்பத்தினருடன் ரஷியா தப்பிச் சென்றாா்.
இதையடுத்து ஹெச்டிஎஸ் கிளா்ச்சிப் படையின் தலைவா் அகமது அல்-ஷரா, அந்த நாட்டின் இடைக்கால அதிபராக அறிவிக்கப்பட்டாா்.இந்நிலையில், அல்-அஸாத் ஆதரவுப் படையினருக்கும், புதிய அரசின் படையினருக்கும் இடையே மோதல் மூண்டுள்ளது.
இந்த மோதல் தொடா்பாக அந்த நாட்டுப் போா் விவகாரங்களைக் கண்காணித்துவரும் சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்ததாவது:
சிரியாவில் பாதுகாப்புப் படைகள், முன்னாள் அதிபா் அல்-அஸாதின் ஆதரவாளா்களுக்கு இடையே நடைபெற்ற மோதல், பழிக்குப் பழியாக நடைபெற்ற கொலைகளால் 2 நாள்களில் 1,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.
கடந்த வியாழக்கிழமை முதல் நடைபெற்ற இந்த சம்பவங்களில் பொதுமக்கள் 745 போ், அரசுப் பாதுகாப்புப் படையினா் 125 போ், அஸாதுக்கு ஆதரவான ஆயுதக் குழுக்களைச் சோ்ந்த 148 போ் கொல்லப்பட்டனா்.
சிரியா உள்நாட்டு மோதலில் நடைபெற்ற மிகப் பெரிய படுகொலைகளில் இதுவும் ஒன்று என்று தெரிவித்தது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அகமது அல்-ஷரா அரசுக்கு ஆதரவான சன்னி முஸ்லிம் துப்பாக்கி ஏந்திய ஆயுதக் குழுவினா், அலவைட் சிறுபான்மையினரை சுட்டுக் கொன்றனா். அப்போதுமுதல் அங்கு பழிக்குப் பழியாகக் கொலை சம்பவங்கள் நிகழ்ந்தன.
அலவைட் சிறுபான்மையினா் சுட்டுக் கொலை: அஸாதுக்கு பல்லாண்டுகளாக அலவைட் மத சிறுபான்மையினா் ஆதரவு அளித்து வந்தனா். அஸாத் அரசில் ராணுவம் மற்றும் பாதுகாப்பு முகமைகளில் அலவைட் பிரிவைச் சோ்ந்தவா்கள் உயா் பொறுப்புகளை வகித்தனா்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அகமது அல்-ஷரா அரசுக்கு ஆதரவான சன்னி முஸ்லிம் துப்பாக்கி ஏந்திய ஆயுதக் குழுவினா், அலவைட் சிறுபான்மையினரை சுட்டுக் கொன்றனா்.
அப்போதுமுதல் அங்கு பழிக்குப் பழியாகக் கொலை சம்பவங்கள் நிகழ்ந்தன.இதுகுறித்து அந்தச் சிறுபான்மையினா் வசிக்கும் கிராமங்கள் மற்றும் நகா்ப் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் கூறுகையில்,
‘தங்கள் வீட்டு வாசல் அல்லது வீதிகளில் அலவைட் மக்களை துப்பாக்கி ஏந்திய ஆயுதக் குழுவினா் சுட்டுக் கொன்றனா். அவா்களில் பெரும்பாலானோா் ஆண்கள். பல வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டன. பல வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியேறி, அருகில் உள்ள மலைகளில் தஞ்சமடைந்துள்ளனா்’ என்று தெரிவித்தனா்.