சென்னை திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (13) காலை, அண்ணாநகருக்கு அருகிலுள்ள திருமங்கலம் பகுதியில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது.
தற்போதைய தகவல்களின்படி, இறந்தவர்கள் மருத்துவர் பாலமுருகன் (52), அவரது மனைவி சுமதி (47) (உயர்நீதிமன்ற வழக்கறிஞர்), மற்றும் அவர்களது இரு மகன்கள் (வயது 15 மற்றும் 17) ஆவர். இவர்கள் அனைவரும் தங்கள் வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.
குடும்பத்தின் ஓட்டுநர், அவர்களைத் தொடர்பு கொள்ள முடியாமல் போனதால் சந்தேகப்பட்டு பொலிஸாருக்கு தகவல் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து, பொலிஸார் வீட்டிற்குள் நுழைந்து உடல்களை மீட்டனர். முதற்கட்ட விசாரணையில், சுமார் 5 கோடி ரூபாய் கடன் தொல்லையே இந்த தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
பாலமுருகன் மற்றும் சுமதி ஆகியோர் நிதி நெருக்கடியால் மன உளைச்சலில் இருந்ததாகவும், இது அவர்களை இந்த முடிவை எடுக்க வழிவகுத்திருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கிறது.
உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளன, மேலும் திருமங்கலம் பொலிஸார் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.