விவசாயப் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் வன உயிரினங்கள் பற்றிய தேசிய கணக்கெடுப்பு இன்று (15) காலை 8.00 – 8.05 மணிக்கு ஆரம்பமானது.
உங்கள் தோட்டம், விவசாய நிலம், பாடசாலை, வழிபாட்டுத் தலம் அல்லது நிறுவனத்தில் இருக்கும் குரங்குகள், அணில்கள் மற்றும் மயில்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தில் பதிவு செய்து உங்கள் பிரதேச கிராம அலுவலர் அல்லது பொருளாதார மேம்பாட்டு அலுவலர் அல்லது சமுர்த்தி மேம்பாட்டு அலுவலர் அல்லது விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளரிடம் கையளிக்குமாறு விவசாய, கால்நடை வளர்ப்பு, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும், இன்று நடைபெறவிருக்கும் வன உயிரினங்கள் பற்றிய தேசிய கணக்கெடுப்புக்குத் தேவையான துண்டுப் பிரசுரங்கள் தற்போது நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் ஜீ.ஜீ.வீ. ஷியாமலி தெரிவித்தார்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் பயிர் இழப்புகளைக் குறைத்தல் ஆகிய முதன்மை நோக்கங்களுடன் இந்த கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய கிளிநொச்சி மாவட்டத்தில் கிராம சேவையாளர்கள் மூலம் வழங்கப்பட்ட படிவங்களுக்கு அமைய பயிர்நிலங்கள், வழிபாட்டு தலங்கள், பாடசாலைகள் பொது இடங்களில் இன்றைய தினம் கணக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை இந்த கணக்கெடுப்பு விடயம் நாடு பூராகவும் பேசும் பொருளாக மாறி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்


