ஏறூர் மண்ணை தேசியத்தில் மனக்கச்செய்து கண்ணீருடன் விடைபெற்ற நளீம் எம்பி
எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) ஓட்டமாவடி.
தேசிய அரசியலில் முன்மாதிரிமிக்க மனிதராக இன்று பார்க்கப்படும் சாலி முஹம்மது நளீம் ஏறாவூர் மண்ணுக்கு கௌவரம் சேர்த்துள்ளார்.
கணவான் அரசியல்வாதிகள் வாழ்ந்து மறைந்த ஏறாவூர் மண்ணில் அரசியலில் அதிகாரங்களை அடைந்து கொள்வதற்காக கட்சி மாறி, வசைபாடித்திரியும் நபர்களுக்கு மத்தியில் கொடுத்த வாக்கை நிறைவேற்றி கௌரவமாக பாராளுமன்றத்திலிருந்து வெளியேறினார்.
ஏறாவூர் அரசியலில் கணிசமான பங்கு முஸ்லிம் காங்கிரஸுக்கும் இன்றைய தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இருக்கிறது.
கட்சியின் முக்கிய தவிசாளர், பிரதித்தலைவர் பதவி என ஏறாவூர் மண்ணுக்கு கொடுத்து அழகு பார்த்தார். அரசியலதிகாரம் என்ற அடிப்படையில் தேர்தலில் தோல்வியை ஏறாவூர் மண் தழுவிய போது, பல தடவைகள் தேசியப்பட்டியலூடாகவும் அதிகாரங்களைக் கொடுத்தார்.
அமைச்சராக, பிரதியமைச்சராக, இராஜாங்க அமைச்சராக, மாகாண முதலமைச்சராக, மாகாண சபை அமைச்சராக, மாகாண சபை உறுப்பினராக என அதிகாரங்களும் தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீமினால் முஸ்லிம் காங்கிரஸினூடாக ஏறாவூர் மண் பெற்றுக்கொண்டது.
இவ்வாறான அதிகாரங்களைப்பெற்று அனுபவித்தவர்கள் காலப்போக்கில் தலைமைக்கெதிராக கட்சிக்கு துரோகம் செய்து கட்சி கட்சியாய் மாறிப்போன போதும்கூட, முஸ்லிம் காங்கிரஸின் தலைமை ஏறாவூம் மண் மீது நம்பிக்கை இழக்கவில்லை. அம்மக்களை கைவிடவுமில்லை.
கடந்த பாராளுமன்றத்தேர்தலில் பலத்த போட்டிக்கு மத்தியில் பல அரசியல் ஜாம்பவான்களை எதிர்த்து களத்தில் நின்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் ஆசனத்தை முஸ்லிம் காங்கிரஸினூடாக உறுதிப்படுத்துவதில் நளீம் ஹாஜியாரின் பங்கு அளப்பெரியது.
இதன் காரணமாக, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம், தனது கட்சிக்கு கிடைத்த தேசியப்பட்டியலை சுழற்சி முறையில் பகிர்ந்தளிக்க முடிவு செய்த போது, கடந்த காலங்களில் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களும் ஆரம்பத்தில் இப்படி ஒரு முயற்சியை எடுத்து தோல்வி கண்ட நிலையில், ரவூப் ஹக்கீம் அவர்களும் கடந்த காலங்களில் தேசியப்பட்டியலை வழங்கி, மீளப்பெறுவதற்கு முயற்சித்த போது சிலர் கட்சி மாறி ஆளுங்கட்சியோடு ஒட்டிக்கொண்ட சம்பவங்கள் இடம்பெற்றிருந்தாலும். மீண்டும் இவ்வாறான முயற்சி வெற்றியளிப்பதற்கு ஆரம்பமாக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான நபராக ஏறாவூர் மகன் நளீம் ஹாஜியாரைத்தெரிவு செய்து அமானிதத்தை ஒப்படைத்த நிலையில், அதனை திரும்பக் கொடுத்து அமானிதத்தைக் காப்பாற்றியவராக வரலாற்றில் இடம்பிடித்தார் நளீம் ஹாஜியார்.
மக்களோடு அன்பாகப்பழகக்கூடியர், ஏறாவூர் நகர சபை உறுப்பினராகத்தெரிவு செய்யப்பட்டு, நகர சபையின் தவிசாளராக, பாராளுமன்ற உறுப்பினராக மூன்று மாதங்கள் இருந்த நிலையில், தனக்கு கிடைத்த சம்பளம் உட்பட மேலதிகக் கொடுப்பனவுகளையும் மக்களுக்குப் பகிர்ந்தளித்து முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்.
தற்போது தன்னிடம் வழங்கப்பட்ட அமானிதத்தை மூன்று மாத காலங்கள் பாராளுமன்றத்தில் மக்களின் குரலாக மட்டு.மாவட்டத்திற்கு வெளியிலுள்ள மக்களின் பிரச்சினைகளையும் பாராளுமன்றத்திற்கு கொண்டு சென்று குரல் கொடுத்தது மாத்திரமின்றி, முஸ்லிம் விரோதக்கருத்துக்கள் பாராளுமன்றத்தில் பேசப்பட்ட போது, துணிந்து எதிர்த்து பதிலடி கொடுத்தவர். குறுகிய பாராளுமன்ற காலத்திற்குள் அடிக்கடி மக்கள் பிரச்சினைகளைப் பேசிய பாராளுமன்ற உறுப்பினராகக் காணப்படுகிறார்.
பிரதேசவாதம் தலைதூக்கியிருக்கும் அரசியலில் தனது பண்பாடு, ஒழுக்கம், சகல பிரதேச மக்களோடும் சகஜமாகப்பழகி, அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதும் அவர்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் பேசியதனூடாகவும் மனங்களை வென்று இவர் இன்னும் பாராளுமன்றத்தில் இருக்கக்கூடாதா? என்று அங்கலாய்க்கும் நிலையைத் தோற்றுவித்து விடைபெற்றுச்சென்று விட்டார்.
பாராளுமன்றில் உருக்கமான உரையோடு, ஏறாவூர் மண்ணுக்கு தேசிய ரீதியாக கௌரவம் சேர்த்து சிறந்த முன்னுதாரணங்களோடு இறுதியில் கண்ணீரோடு விடைபெற்றார்.
இவரின் நடவடிக்கைகளை பாராளுமன்றில் அவதானித்த ஆளுங்கட்சியின் முக்கிய அமைச்சர் சொன்ன வார்த்தை “இவர் எங்கள் கட்சியில் இருக்க வேண்டியவர்” என்று.
பாராளுமன்றத்தில் பிரியாவிடை பெறும் போது தனக்கு பதவி தந்து தன்னை அலங்கரித்து அழகு பார்த்த தலைவரிடம் விடைபெறும் போது ஆரத்தழுவிய போது தலைவரின் கண்களும் கலங்கி விட்டது.
எதிர்கால முஸ்லிம் அரசியலில் இவர் போன்ற பலரும் உருவாக வேண்டுமென எதிர்பார்ப்பதோடு, ஏறாவூர் நகர சபைத்தேர்தலில் களம் காணவிருக்கும் நளீம் ஹாஜியாருக்கு ஏறாவூர் மக்கள் அமோக ஆதரவினை வழங்கி தங்களைக் கௌரவப்படுத்தி மண்ணை தேசியத்தில் மனக்கச்செய்த மகனை நகர சபைத் தலைவராகத்தெரிவு செய்ய வேண்டும்.
அதற்காக ஏறாவூர் வட்டாரங்களில் நளீம் ஹாஜியாரின் தலைமையில் வட்டார ரீதியாகப் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரையும் அந்தந்த வட்டார மக்கள் நளீம் ஹாஜியாராக எண்ணி வாக்களித்து வெற்றி பெறச் செய்வது அவரின் பெரும்தன்மைக்கு ஏறாவூர் மக்கள் கொடுக்கும் கௌரவமாகப் பார்க்கப்படும்.
இவ்வாறு ஏறாவூர் மண்ணை தேசியத்தில் கௌரவப் படுத்திய, கணவான் அரசியலை மீண்டும் உயிர்ப்பித்த நளீம் ஹாஜியாருக்கு ஏறாவூர் மக்கள் செய்யவிருக்கும் கைங்கரியம் என்னவென்பதை தேசியம் பார்த்துக் கொண்டிருக்கிறது.
உள்ளூராட்சித்தேர்தல் முடிவுகள் அதற்கான சிறந்த பதிலாக அமையுமென எதிர்பார்க்கிறோம்.