காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய மனிதாபிமானமற்ற வான்வழி தாக்குதலில், 404 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ரொய்ட்டர் செய்தி தளம் தெரிவித்துள்ளது.
புனித ரமலான் காலப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தெற்கு மற்றும் மத்திய காசா பகுதியில் உள்ள மவாரி, கான் யூனிஸ், அல் தராஜ், ராபா உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் படையினர் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் இதுவரை 404 பேர் கொல்லப்பட்டனர்.
இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்த குடியிருப்புப் பகுதிகளைத் தாக்கியதால், இறந்தவர்களில் பலர் குழந்தைகள் என்று பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கிடையான போர்நிறுத்த உடன்படிக்கை கடந்த ஜனவரி 19 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டதிலிருந்து நேற்றைய தினம் வரையில், இஸ்ரேல் பல தடவைகள் போர் நிறுத்தத்தை மீறியுள்ளதுடன், 170 க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்துள்ளனர்.
மார்ச் 2 அன்று, போர் நிறுத்தத்தின் முதல் கட்டம் காலாவதியான நிலையில், இஸ்ரேல் காசாவிற்கு அனைத்து மனிதாபிமான உதவிகளையும் தடுத்து நிறுத்தியதுடன், உணவு, மருந்து மற்றும் எரிபொருள் விநியோகத்தை துண்டித்தது.
இது உலகளாவிய ரீதியில் பெரும் கண்டனத்தை எழுப்பியதுடன்,இது சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறும் செயல் என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்தன. காசாவிற்கு வெளியே மனிதாபிமான உதவிகளும் சென்ற லாரிகள் நிறுத்தப்பட்டதால் மனிதாபிமான நிலைமைகள் மோசமடைந்தன, இதன் விளைவாக பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்கும் அபாயம் அதிகரித்தது.
காசா மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான போரில் குறைந்தது 48,577 பாலஸ்தீனியர்கள் இறந்துள்ளதாகவும் 112,041 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பெப்ரவரி 3 ஆம் தேதி, பலஸ்தீன அரசாங்க ஊடக அலுவலகம் இறப்பு எண்ணிக்கையை 61,700 க்கும் அதிகமாகப் புதுப்பித்தது, இடிபாடுகளுக்கு அடியில் காணாமல் போன ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் இறந்துவிட்டதாகக் ஊடக அலுவலகம் உறுதிப்படுத்தியது.