Saturday, April 19, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஇலங்கை பொலிஸில் மாற்றம் அவசியம்!

இலங்கை பொலிஸில் மாற்றம் அவசியம்!

விசேட அதிரடிப்படையணியின் 82 ஆவது குழுவின்  பயிற்சி நிறைவு விழாவில் ஜனாதிபதி  தெரிவிப்பு

சட்டம், ஒழுங்கு மற்றும் மேலாதிக்கத்தை உறுதி செய்வதற்கு இலங்கை  பொலிஸில் சாதகமான மாற்றம் அவசியம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது தொடர்பில் இலங்கை  பொலிஸ் மீது குடிமக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அதனைப் பேணுவது பொலிஸ் திணைக்களத்தின் பொறுப்பு என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

களுத்துறை, கட்டுகுருந்த விசேட அதிரடிப்படை பயிற்சி முகாமில் இன்று (07) நடைபெற்ற 82 ஆவது அடிப்படைப் பயிற்சி பாடநெறியை நிறைவு செய்தோர் வெளியேறும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

தமது தொழிற்துறைக்கு ஒருவர் எந்தளவு நியாயத்தை நிலைநாட்டியுள்ளார், கௌரவமளித்துள்ளார் என்பது அவரின்  தொழில் வாழ்க்கையின் ஊடாகப் பிரதிபலிக்கிறது எனவும் அந்த தொழில் முறையை அடைந்து இந்த நாட்டுக்கு அவசியமான மாற்றத்தை ஏற்படுத்த பங்களிக்குமாறு பயிற்சி பெறும் இளம்  பொலிஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

பல துறைகள் வீழ்ச்சியடைந்துள்ள தருணத்தில், நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி  அரசியல் அதிகாரத்தை மாற்ற பிரஜைகள் நடவடிக்கை எடுத்ததை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசியல் அதிகாரத்தை மாற்றுவதன் மூலமாக மாத்திரம், ஒரு நாடு வெற்றிபெறாது என்றும், அனைத்து துறைகளிலும் சாதகமான மாற்றம் தேவை என்றும் சுட்டிக்காட்டினார்.

பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பொறுப்பு புதிய பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும்,  அதனைப் பாதுகாக்கும் அதே வேளையில், திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருட்களுக்கு இந்த நாடு பலியாக இடமளிக்கக்கூடாது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

இளைய தலைமுறையினர்,  தாய்நாட்டின் பொறுப்பை  தங்கள் தோள்களில் ஏற்று, தங்கள் எதிர்காலத்தையும் நாட்டின் எதிர்காலத்தையும் சாதகமான திசையில் கொண்டு செல்ல பாடுபட வேண்டும் என்றும், இன்று இலங்கை பொலிஸ் நிரந்தர சேவையில் இணைவது வலுவான முன்னெடுப்பாகும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

அவசர நிலைமைகளில் பிரஜைகளுக்கு  விசேட அதிரடிப்படை வழங்கி வரும் சேவை மிகவும் பாராட்டத்தக்கது என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்த அணிவகுப்பில் 118 உப பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் 231 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் தங்கள் அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக   நிறைவு செய்து  வெளியேறினர்.

பயிற்சி நெறியின் போது விசேட  திறமையை வெளிப்படுத்திய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை வழங்கினார்.

பயிற்சி பெற்று வெளியேறும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு நினைவுப் பரிசு ஒன்றும் வழங்கப்பட்டது.

போர் களத்தில் மேற்கொள்ளப்படும்  நடவடிக்கைகள் தொடர்பில் விசேட அதிரடிப்  படை அதிகாரிகளால் கண்காட்சியொன்றும் இங்கு காண்பிக்கப்பட்டது.

1983 ஆம் ஆண்டு “நியதை ஜய” (வெற்றி நிச்சயம்) என்ற தொனிப்பொருளுடன் நிறுவப்பட்ட இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படை  தற்போது பிரபுக்கள் பாதுகாப்பு, குற்றங்கள், திட்டமிடப்பட்ட குற்றங்களை தடுத்தல் மற்றும் போதைப்பொருளற்ற நாட்டை உருவாக்குதல் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு என்பவற்றுக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு கீர்த்திமிக்க பிரிவாகும்.

பொதுமக்கள்  பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, பொதுமக்கள்  பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சமந்த டி சில்வா, பொலிஸ் அதிகாரிகள், பயிற்சி பெற்று வெளியேறும் பொலிஸ் அதிகாரிகளின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர்  இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2025-04-07

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular