அரச சேவையில் அத்தியவசிய வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரிகள் மற்றும் இளைஞர் யுவதிகள் 30,000 பேரை ஆட்சேர்ப்பு செய்தல்.
அரசியல் அழுத்தங்களின்றி தகைமைகள் மற்றும் திறமைகளின் அடிப்படையில் அரச துறைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.
கொவிட் 19 தொற்றுநோய் மற்றும் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக வேலையற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையும், தற்போதுள்ள அரச நிதி நிலைமையையும் கருத்தில் கொண்டு, அரச சேவையில் அத்தியவசிய வெற்றிடங்கள் 30,000 ஆட்சேர்ப்பு செய்வதற்காக 2025 வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்வதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கௌரவ ஜனாதிபதி அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டத்திற்கு பாராளுமன்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அரச சேவையில் பல்வேறு 5 நிறுவனங்களில் பணிக்குழாமினரை மீண்டும் மீளாய்வு செய்து, அத்தியவசிய ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்காக விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளின் அடிப்படையில் தற்போது அரச சேவையில் புதிய ஆட்சேர்ப்புக்கள் 18,853 இற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கிணங்க, பொது நிருவாக, உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு “2025 வரவு செலவுத்திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் இளைஞர் யுவதிகள் 30,000 பேரை அரச சேவையில் இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டம்” கீழ் நியமமான ஆட்சேர்ப்பு நடவடிக்கை முறைகளுக்கமைய விண்ணப்பங்களைக் கோரி குறித்த ஆட்சேர்ப்புக்களை செய்வதற்கான ஏற்புடைய அமைச்சுக்கள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
