இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 10,000 ரூபாய் பணம் தருவதாக கூறி வௌிநாட்டில் இயங்கும் யூடியூப் தளம் ஒன்றினால் வௌியிடப்பட்ட தகவல் உண்மைக்கு புறம்பானது என அந்த பணியகம் அறிவித்துள்ளது.
இதற்காக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் கடவுச்சீட்டின் நகலை நாட்டில் உள்ள எந்தவொரு பணியக அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம் என அந்த வீடியோவில் கூறப்படுகிறது.
எனினும் பணியகம் இதுபோன்ற ஒரு அறிக்கையை ஒருபோதும் வெளியிட்டதில்லை என்றும், இந்த மோசடியில் சிக்கி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் பணியகம் பொதுமக்களை வலியுறுத்துகிறது.
இதுவரை இதுபோன்ற ஒரு திட்டத்தை பணியகம் செயல்படுத்தவில்லை என்றும், இது புலம்பெயர்ந்த சமூகத்தை தவறாக வழிநடத்தும் நோக்கம் கொண்ட பிரச்சாரம் மட்டுமே என்றும் பணியகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
இதுபோன்ற பொய்யான பிரச்சாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் புலம்பெயர்ந்த சமூகத்தை பணியகம் கேட்டுக்கொள்கிறது.
மேலும், இதுபோன்ற சமூக ஊடக நிறுவனங்களுக்கு அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பரப்புவதற்கு அங்கீகாரம் இல்லை என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற மோசடி செய்பவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்கள், பணியகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், பேஸ்புக், யூடியூப் மற்றும் டிக்டொக் மூலம் மட்டுமே பணியகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.