2019 ஏப்ரல் 21 ஆம் தேதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று நாம் நினைவுகூரும் வேளையில், இலங்கை முஸ்லிம்களாகிய நாம், இந்த கொடூரமான பயங்கரவாதச் செயலால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் அனைத்து சமூகங்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா அறிக்கை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இந்தக் கொடூரமான தாக்குதல்களை நாங்கள் தெளிவாகவும் உறுதியான முறையிலும் கண்டிக்கிறோம். இந்தக் குற்றங்களைச் செய்தவர்கள் இஸ்லாத்தையோ அல்லது முஸ்லிம் சமூகத்தையோ பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அவர்களின் செயல்கள் எமது நம்பிக்கைக் கொள்கைகளையும், நாம் நிலைநிறுத்தும் விழுமியங்களையும் முற்றிலுமாக மீறுவதாகும். ஆரம்பத்திலிருந்தே, மத அறிஞர்களின் வழிகாட்டுதலின் கீழ் முஸ்லிம் சமூகம் குற்றவாளிகளை நிராகரித்து கண்டனம் செய்தது, எங்கள் வெறுப்பின் உறுதியான அறிக்கையாக இஸ்லாமிய இறுதிச் சடங்குகளை மறுத்தது.
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, முஸ்லிம்கள் இந்த மண்ணில் விசுவாசமான, அமைதியான மற்றும் தொழில்முனைவோர்களாகவும் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்கும் குடிமக்களாகவும் வாழ்ந்து வருகின்றனர்.
இலங்கையில் சுமூகமான மற்றும் குழப்பமான எல்லாக் காலங்களிலும் சகவாழ்வு, விசுவாசமான சேவை மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற வரலாற்றைக் கொண்டுள்ளதோடு குறிப்பிடத்தக்கவிதமாக அநீதிகள், பாகுபாடு மற்றும் அவதூறுகளை எதிர்கொண்ட போதிலும், நாங்கள் எப்போதும் பொறுமை மற்றும் அமைதியின் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளோம், ஒருபோதும் தீவிரவாதம் அல்லது வன்முறையை பதிலாக நாங்கள் பயன்படுத்தவில்லை.
ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவங்கள் பயங்கரவாதச் செயல்கள் மட்டுமல்ல, இஸ்லாத்தை அவதூறு செய்வதையும், முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்துவதையும், நோக்கமாகக் கொண்ட ஒரு பரந்த சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பது தெளிவாகிறது. முழு உண்மையும் அம்பலப்படுத்தப்பட வேண்டும் என்றும், இதில் பலிக்கடாவாக உள்ளவர்களை விடுத்து உண்மையிலேயே பொறுப்பானவர்கள் – தாக்குதலின் சூத்திரதாரிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமமாகும்;, தாக்குதல் நடந்து; ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும் உண்மையான குற்றவாளிகள் அடையாளம் காணப்படாமலும், தாக்குதல்களைச் சுற்றியுள்ள முக்கிய கேள்விகளுக்கு பதிலளிக்கப்படாமலும் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் முஸ்லிம் தனிநபர்கள் நீண்டகாலமாக குற்றச்சாட்டுகள் அல்லது தீர்ப்புகள் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை நாங்கள் மேலும் ஆழ்ந்த கவலையுடன் சுட்டிக்காட்டுகிறோம். இத்தகைய நடைமுறைகள் அவநம்பிக்கையையும் பயத்தையும் மேலும் ஆழப்படுத்தியுள்ளன. மேலும் தாமதமின்றி அனைத்து விசாரணைகளையும் வெளிப்படையான மற்றும் நம்பகமான முடிவுக்குக் கொண்டுவருமாறு இலங்கை அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

இலங்கையில் வன்முறைகளை தூண்டுவதும் தண்டனைகளின்றி விடுபடுவதும் மீண்டும் மீண்டும் வேரூன்ற காரணமாக உள்ள நிறுவனங்கள், கட்டமைப்புகள் மற்றும் அரசியல் கலாசாரம் என்பவற்றில் அர்த்தமுள்ள மாற்றங்களை ஏற்படுத்துமாறு நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்லாமல், தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியால் துயருற்றிருக்கும் நீண்ட உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் 1971, 1989ம் ஆண்டுகளில் இடம்பெற்ற கிளர்ச்சிகளால் பாதிக்கப்பட்ட சிங்கள இளைஞர்கள் மற்றும் அழுத்கம, ஜின்தோட்டை, திகன, மினுவாங்கொட போன்ற இடங்களில் நடந்த தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் அத்துடன் கோவிட்-19 காலத்தில் கட்டாய தகனம் செய்ததன் மூலம் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் என எல்லாம் சமூகங்களுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும். இதில் முழுமையான கரிசனை இல்லையெனில், நம்பிக்கையுடனும் முன்னோக்கியும் செல்லும் ஒரு தேசியத் தரமான கூட்டு முன்னேற்றப் பாதை என்றும் எட்டமுடியாத ஒன்றாகவே இருக்கும்.
கூட்டு தண்டனைக்கு எதிராகவும், அதைத் தொடர்ந்து வந்த குழப்பமான காலங்களில் நீதிக்காக போராடிய கௌரவ கர்தினால் மால்கம் ரஞ்சித், கத்தோலிக்க திருச்சபை மற்றும் அனைத்து மத மற்றும் இனக் குழுக்களைச் சேர்ந்த தனிநபர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களது துணிச்சலும் ஒற்றுமையும் ஒருபோதும் மறக்கப்படக்கூடாதவை.
ஓரங்கட்டப்பட்ட குழுவாக அல்லாமல் இந்த நாட்டின் சமமான அந்தஸ்துடன் அறிவொளி பெற்ற சமூகமாக நாம் முன்னேற உறுதிபூண்டுள்ளோம். அனைத்து இலங்கையர்களும் பிரிவினை மற்றும் சந்தேகத்தையும், அவற்றை உருவாக்கும் வெளிப்புற மற்றும் உள் கூறுகளையும் நிராகரிக்கவும், சமூகங்களிடையே நம்பிக்கையை வளர்க்கவும், அமைதி, இரக்கம் மற்றும் உண்மையான தேசிய ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்ட எதிர்காலத்தை வடிவமைக்கவும் முன்வருமாரு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
பாதிக்கப்பட்டவர்களின் நினைவுகள் அதிக வெறுப்பு மற்றும் அநீதியால் மதிக்கப்படக்கூடாது, மாறாக உண்மை மேலோங்கி நிற்கும், நீதி நிலைநாட்டப்படும், மேலும் ஒவ்வொரு குடிமகனும் – இன மத பேதமின்றி – கண்ணியத்துடனும் சமத்துவத்துடனும் வாழக்கூடிய ஒரு நாடாக இலங்கை மாறுவதை உறுதி செய்வதன் மூலம் கௌரவிக்கப்பட வேண்டும் என்றும் அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா தெரிவித்துள்ளது.