உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று (03) நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைந்தது.
அதன்படி, இன்று தொடங்கும் அமைதி காலத்தில் வேட்பாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் எந்தவித பிரச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவுறுத்தியுள்ளார்.
339 உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக நடைபெறும் இந்தத் தேர்தல், நாளை மறுநாள் காலை 7.00 மணிக்கு தொடங்க உள்ளதுடன், 17,156,338 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களில் இருந்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 75,589 என்று தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.
இதற்கிடையில், உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் முடிவடைந்த இன்றுடன் தொடங்கும் அமைதி காலத்தில் சட்டத்தை மீறும் அனைவருக்கும் எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அமைதி காலத்தில் சட்டவிரோதமாக சுவரொட்டிகள், பதாகைகள் அல்லது கட்அவுட்களை யாராவது காட்சிப்படுத்தியிருந்தால், அவை அகற்றப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 65,000க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.