இலங்கை அரசாங்கம் ஆதாரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை கடுமையாக நிராகரிப்பதாகவும், கனடாவில் இனப்படுகொலை நினைவுச்சின்னம் நிர்மாணிக்கப்படுகின்றமை தொடர்பில் கண்டனம் தெரிவிப்பதாகவும் வௌிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக, வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று (14) கனேடிய உயர் ஸ்தானிகரைச் சந்தித்து, ஆதாரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் மற்றும் அத்தகைய நினைவுச்சின்னத்தை நிர்மாணிப்பதற்கான அனுமதிக்கு இலங்கை அரசாங்கத்தின் கடுமையான எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்தினார்.
இத்தகைய நடவடிக்கைகள், நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கான அரசாங்கத்தின் முயற்சிகளை சிக்கலாக்கி, குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டினார்.
கடந்த சில தினங்களாக நாட்டில் பேசும் பொருளாக மாறியுள்ள கனடாவில் இனப்படுகொலை நினைவுச்சின்னம் நிர்மாணிக்கப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகின்றமையை அடுத்து குறித்த அவசர சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது.
மேலும் கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிர் நீத்த மக்களை நினைவுகூர்ந்து இம் மாதம் 18 ஆம் திகதி வரை வட மாகாணத்தின் பல பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவு நாட்களில் நான்காவது நாள் கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகம் ஜீவராசா அவர்களினால் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி இன்றைய தினம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
