இலங்கையில் தமிழினப்படுகொலை இடம்பெற்றது என்பதை பிரான்ஸ் அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்துவதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற தமிழர்களுக்கான பிரான்ஸ் உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கருத்துரைக்கும் காணொளி ஒன்று இந்த கூட்டத்தில் ஒளிபரப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதகுருமார்களால் சிங்களமயமாக்கலும் பௌத்த மயமாக்கலும் இடம்பெறுவதாக இந்த காணொளியின் வாயிலாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இன்றும் வடக்கு கிழக்கில் இராணுவத்தின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக 2 அல்லது 3 தமிழர்களுக்கு ஒரு இராணுவ உத்தியோகத்தர் உள்ளார். அத்துடன் வடக்கு கிழக்கில் இராணுவம் கட்டுப்படுத்தும் நிலத்தின் அளவும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
தமிழர் பகுதியில் அவ்வப்போது சிங்கள குடியேற்றங்கள் அதிகரித்து வருகின்றன என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தமது காணொளியில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் தனித்துவம் தொடர்ந்தும் உறுதி செய்யப்படுவதற்கான சில காரணங்களையும் அவர் தமது காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.
பிரான்சில் உள்ள 47 மாநகர சபைகளில் இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடந்ததை அங்கீகரிக்கும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அத்துடன் இந்தியாவின் தமிழக மாநிலமும் கனேடிய நாடாளுமன்றமும் இவ்வாறான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன.
எனவே, ஆர்மெனியா மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளில் இனப்படுகொலை இடம்பெற்றமையை அங்கீகரித்ததை போன்று இலங்கையிலும் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை பிரான்ஸ் அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்துவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.